டொராண்டோ: கனடா பிரதமர் ஜஸ்டின் துரூடோ 10 இலட்சம் வெளிநாட்டு குடியேறிகளை தன் நாட்டில் குடியேறச் செய்ய பிற நாடுகளிடம் கேட்டு கொண்டுள்ளதாக செய்திகள் பரவி வருவதை அந்நாட்டின் அகதிகள் மற்றும் குடிமக்கள் குடிவரவு அலுவலகம் மறுத்துள்ளது.
நைஜீரியா, கென்யா, ஜிம்பாப்வே, ஜாம்பியா, கானா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளிலிருந்து இந்த குடியேறிகள் எதிர்பார்க்கப்படுவதாக அந்த செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.
“இந்த செய்திகள் அனைத்தும் தவறானவை. இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிவிக்கப்பட்ட கனடா குடிவரவு கொள்கையை பின்னணியாக வைத்து இவை எழுதப்பட்டுள்ளன. அடுத்த மூன்று ஆண்டுகளில் 10 இலட்சம் குடியேறிகளை கனடிய அரசு ஈர்ப்பதற்கு திட்டமிடுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கொள்கை எந்த தனிப்பட்ட நாட்டு மக்களையும் குறிப்பிட்டு வெளியிடப்படவில்லை.” என அது தெரிவித்துள்ளது.
1990-ஆம் ஆண்டு முதல் 60 இலட்சத்திற்கும் மேலான குடியேறிகள் கனடாவில் குடியேறியுள்ளனர். சமீபத்திய ஆண்டுகளில் இவ்வாறு குடியேறுவோரின் விழுக்காடு உயர்ந்து வருகின்றதாகக் கூறப்படுகிறது.