சமூகப் பணிகளில் ஈடுபட வேண்டுமென்ற பல்கலைக்கழகத்தின் கொள்கைக்கு முக்கியத்துவம் அளித்து முதன்முறையாக தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்காக இம்முயற்சியை அடிப்படைக் கல்விக்கான மையம் – Centre for Foundation Studies (CFS – Kampar) என்ற அமைப்பு முன்னெடுத்தது.
கிந்தா செலாத்தான் மாவட்டத்தில் இவ்வாண்டு யுபிஎஸ்ஆர் மதிப்பீட்டுத் தேர்வை எழுதவிருக்கும் 150 மாணவர்களில் 100 மாணவர்களுக்கு இப்பட்டறையில் கலந்து பயன்பெற முதன்மை வாய்ப்பு வழங்கப்பட்டது. மாணவர்களோடு சுமார் 25 ஆசிரியர்களும் இப்பட்டறையில் கலந்துகொண்டனர்.
பட்டறையின் நிறைவு விழாவில் CFS – இயக்குனர் தான் லீ சியூவ், CFS – கலை, சமூக அறிவியல் துறையின் தலைவர் பாக்கியலட்சுமி, கிந்தா செலாத்தான் மாவட்ட கல்வி இலாகாவின் அதிகாரி அஹமாட் மஸ்வான் ஆகியோருடன் பள்ளித் தலைமையாசிரியர்களும் கலந்துகொண்டனர்.
CFS – இயக்குனர் தான் லீ சியூவ் உரையாற்றுகையில் இதுமாதிரியான பட்டறை மாணவர்களுக்கு மேலும் ஆழமான புரிதலையும் நல்லதொரு அனுபவத்தையும் கொடுக்குமென்று குறிப்பிட்ட அவர், பட்டறையில் பங்குபெற்ற மாணவர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கினார்.
பட்டறையில் கலந்துகொண்ட ஆசிரியர்கள் கூறுகையில், இப்பட்டறையானது மாணவர்களுக்கு மட்டுமல்லாது ஆசிரியர்களுக்கும் பயனுள்ளதாக அமைந்ததாக குறிப்பிட்டனர். திறன்மிகு ஆசிரியர்களின் வழிக்காட்டல் ஆசிரியர்களுக்கு கற்றல் கற்பித்தல் மீதான நுட்பங்களையும் திறன்களையும் அறிந்துகொள்ளும் களமாக அமைந்தது என்றனர்.
தேர்வு காலங்களில் பள்ளிகளிலும் இதுபோன்ற பட்டறைகள் ஏற்பாடு செய்யப்பட்டாலும், எல்லாப் பள்ளிகளையும் ஒன்றிணைத்து ஒரே இடத்தில் பட்டறை நடத்தப்படும்போது விரயங்கள் கட்டுப்படுத்தப்படுவதாகவும், வசதியற்ற தோட்டப்புற, புறநகர் பள்ளிகளுக்கு இது நல்லதொரு வாய்ப்பாக அமைவதாகவும் ஏற்பாட்டுக்குழு சார்பாக தெரிவிக்கப்பட்டது.
இனி வரும் காலங்களில் இம்மாதிரியான பட்டறைகள் மாணவர்களின் தேவையும் அவசியத்தையும் கவனத்தில் கொண்டு மேற்கொள்ளப்படுமெனவும் கூறப்பட்டது.