பெட்டாலிங் ஜெயா – அண்மையில் கல்வி அமைச்சின் ஆதரவோடு தொடங்கப்பட்ட, ‘மலேசியத் தமிழ்மொழிக் காப்பகம்’ கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.
நாளை ஜூன் மாதம் 9 ஆம் நாள் ( ஞாயிறு) பெட்டாலிங் ஜெயா விவேகானந்தா தமிழ்ப்பள்ளியில் பிற்பகல் 2.30 மணியளவில் இந்த நிகழ்ச்சி தொடங்குகிறது.
அரசு ஆதரவுடன் செயல்பட்டு வரும் இந்த மலேசியத் தமிழ்மொழி காப்பகத்தின் நிருவாகக்குழுத் தலைவர் டத்தோஸ்ரீ தெய்வீகன் மற்றும் காப்பகத்தின் ஏனைய உறுப்பினர்களும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வர். இவர்களை மக்களுக்கு அறிமுகம் செய்து வைக்கும் ஒரு நிகழ்ச்சியாகவும் இது அமையும்.
மலேசியத் தமிழ்மொழிக் காப்பகம் அமைச்சு, மதியுரை, நிருவாகம், பணி என்ற நான்கு நிலைகளில் இருந்து தம் கடமையைச் செவ்வனே செய்யும். நிருவாகம் எவ்வாறு செயல்படும் என்பதைக் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் தெரிந்துகொள்ளலாம்.
இந்தக் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மலேசியத் தமிழ்மொழிக் காப்பகம் தொடங்கப்பட்டதன் பின்னணி குறித்து விளக்கம் அளிக்கப்படும்.
மலேசியத் தமிழ்மொழிக் காப்பகத்தின் ( மதகம்) தொலை நோக்குத்திட்டம், செயல்திட்டம் குறித்தும் விளக்கம் அளிக்கப்படும். மேலும், தமிழ்மொழியின் வளர்ச்சிக்கும் தொடர்ச்சிக்கும் மலேசியத் தமிழ்மொழிக் காப்பகம் எவ்வகையில் தொடர்ந்து பங்காற்றும் என்று விளக்கம் அளிக்கப்படும்.
மக்களிடையே எழுந்துள்ள பல்வேறு ஐயப்பாடுகளுக்கும் வினாக்களுக்கும் விடை பெறுவதற்கு இந்தக் கலந்துரையாடல் கூட்டம் வழிவகுக்கும் என்று கருதுகின்றோம். கூட்ட ஒழுங்கும் எண்ணிக்கையும் கருதி ஒவ்வோர் இயக்கத்திலிருந்தும் ஒரு நிகராளி கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவர்.
தமிழ், தமிழ் மொழி, தமிழ்க்கலை, தமிழ் இலக்கியம், தமிழர் சமயம் சார்ந்த இயக்கம் / சங்கம் அல்லது தமிழ்ப் பள்ளிகளுக்குப் பாடாற்றும் இயக்கம் என்ற வகையில் பங்கேற்பாளர்கள் கலந்து கொள்ளலாம்.
தமிழ் ஊடகத்தினரும் பங்கேற்க வாய்ப்பு
தமிழ் நாளிதழ்கள், வார, மாத இதழ்கள், நேரலை, வலை ஏடுகள், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்கள் உட்பட ஓர் ஊடகத்திற்கு ஒருவர் என்ற வகையில் இந்தக் கலந்துரையாடலில் கலந்து விவரங்கள் பெறலாம்.
மலேசியத் தமிழ்மொழிக் காப்பகத்தின் அதிகாரப்படியான முகநூல், மின்னஞ்சல், அகப்பக்கம், முத்திரை ஆகியவை குறித்தும் இந்த நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்படும்.
மலேசியக் கல்வியமைச்சின் தமிழ் சார்ந்த பிரிவுகளின் நிகராளிகள், மாநில தமிழ் மொழி உதவி இயக்குநர்கள்/ அல்லது அவர்களின் நிகராளிகள், ஆசிரியர் பயிற்சிக் கழகத்தின் நிகராளிகள், உள்துறை அமைச்சின் தமிழ் அதிகாரிகளின் நிகராளிகள், தகவல் தொடர்பு அமைச்சின் தமிழ் அதிகாரிகள் ஆகியோரை இந்தக் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து சிறப்பிக்க அழைக்கின்றோம்.
தமிழ்மொழியின் பெருமை அதன் தொன்மையை மட்டும் பேசுவதோடு நின்று விடக் கூடாது. அதன் தொடர்ச்சிக்கும் நாம் பங்காற்ற வேண்டும்.
ஒற்றுமை வலிமை சேர்க்கும். தொடர் வளர்ச்சிக்கு வித்திடும். இணைந்து செயல்படுவோம்! இலக்கை அடைவோம்! என்ற தாரக மந்திரங்களுடன் செயல்படும் தமிழ் மொழி காப்பகம் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொள்ள ஆர்வமுள்ளவர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறது.
மேலும் விவரம் பெற தொடர்புகொள்க:
- முனைவர் இரா. குமரவேலு – 019-6736607
- மருத்துவர் செ. செல்வம்- 012-2035464
- திரு. இரா.சுப்பிரமணியம்- 019-266 3551
# குறிப்பு: இயக்க/ சங்க நிகராளிகள் ஏற்பாட்டாளரை தொடர்புகொண்டு தங்கள் விவரங்களை தெரியப்படுத்துமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொள்கிறார்கள்.