Home Photo News மலேசியத் தமிழ் காப்பகம் தொடக்கம் – தமிழ் மொழிக்கான அரசாங்கத்தின் இன்னொரு திட்டம்

மலேசியத் தமிழ் காப்பகம் தொடக்கம் – தமிழ் மொழிக்கான அரசாங்கத்தின் இன்னொரு திட்டம்

1870
0
SHARE
Ad

கோலாலம்பூர் – நாட்டில் தமிழ் மொழி வளர்ச்சிக்கும், மேம்பாட்டிற்கும் கடப்பாடு கொண்டுள்ள நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தின் மற்றொரு புதிய திட்டமாக ‘மலேசியத் தமிழ் காப்பகம்’ இன்று முதல் (வெள்ளிக்கிழமை மே 3) உதயமாகிறது என அறிவித்த துணைக் கல்வி அமைச்சர் தியோ நீ சிங், அந்த இயக்கத்தை இன்று காலை அதிகாரபூர்வமாகத் தொடக்கி வைத்தார்.

அரசாங்கத்தின் மொழிவாரியான திட்டங்களுக்கு இடையில் நிலவும் ஒற்றுமை, உடன்பாடு ஆகியவற்றைக் குறிக்கும் வண்ணம் இந்தத் தொடக்க விழா இன்று மலாய் மொழிக்கான அரசு அமைப்பான டேவான் பகாசா டான் புஸ்தாகா கட்டடத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கான இடத்தையும், செலவினங்களையும் கூட டேவான் பகாசா டான் புஸ்தாகா அமைப்பே ஏற்றுக் கொண்டது.

டேவான் பகாசாவின் உயர்நிலை அதிகாரிகளும் இந்த நிகழ்ச்சியில் கலந்து சிறப்பித்தனர்.

#TamilSchoolmychoice

நிகழ்ச்சியின் இன்னொரு முத்தாய்ப்பாக சீனமொழிக் காப்பகத்தின் தலைவர் டத்தோ கோ ஹின் சான் இந்த தமிழ் மொழிக் காப்பகத்தின் தொடக்க நிகழ்ச்சியில் கலந்து சிறப்பித்தார்.

தமிழ்க் காப்பகத்தின் தலைவராக துணை கல்வி அமைச்சர் தியோ நீ சிங் செயல்படுவார். இதுவும் ஒரு புதுமையான நடவடிக்கையாகும். தமிழ் மொழி மீதான காப்பகம் ஒன்றிற்கு சீன துணையமைச்சர் பொறுப்பேற்றிருப்பது அனைத்து மொழிகளையும் சரிசமமாகக் கருதித் திட்டங்களை மேற்கொள்ளும் நம்பிக்கைக் கூட்டணியின் புதிய அணுகுமுறையாகக் கருதப்படுகிறது.

காப்பகத்தின் துணைத் தலைவராக முன்னாள் காவல் துறை ஆணையர் டத்தோஸ்ரீ ஆ.தெய்வீகன் செயல்படுவதோடு காப்பகத்தின் நிருவாகத் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனதுரையில் இன்றைய தினம் ஒரு வரலாறு படைக்கப்படுவதாக சுட்டிக் காட்டி, தமிழ் மொழி காப்பகத்திற்கு சீன துணையமைச்சர் ஒருவர் தலைமைப் பொறுப்பேற்பது தற்போதைய முதிர்ச்சி நிலையைக் காட்டுவதாக அமைகிறது என்றும் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

காப்பகத்தின் தொடக்க விழாவைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட தரப்புகளுடனான புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்று கையெழுத்திடப்பட்டது.

துணையமைச்சரும், சுபாங் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவராசாவும் இந்த நிகழ்ச்சியில் கலந்து சிறப்பித்தார்.

தமிழ்க் காப்பகத் தொடக்க விழாவின் படக் காட்சிகளை இங்கே காணலாம்: