கோலாலம்பூர்: கல்வி அமைச்சு இந்த ஆண்டு இடைநிலைப் பள்ளி சேர்க்கையிலிருந்து விடுப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கையை பூஜ்ஜியமாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
கடந்த ஆண்டு ஆரம்பப் பள்ளியிலிருந்து இடைநிலைப் பள்ளிக்கு சென்ற மாணவர்களின் சதவீதத்தில் அதிகரிப்பு இருப்பதால், இந்த இலக்கை அடைய முடியும் என்று துணை அமைச்சர் தியோ நீ சிங் கூறினார்.
கடந்த 2018-ஆம் ஆண்டில், ஆரம்பப் பள்ளிகளிலிருந்து இடைநிலைப் பள்ளிக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை 96.81 விழுக்காடு பதிவான நிலையில், 2019-ஆம் ஆண்டில், அதன் விழுக்காடு 98.42 விழுக்காடாக பதிவாகி இருந்தது என்று அவர் கூறினார்.
“எனவே இந்த ஆண்டு, நாங்கள் இதில் கவனம் செலுத்துகிறோம் . ஆறாம் ஆண்டுக்குப் பிறகு அனைத்து மாணவர்களும் இடைநிலைக் கல்வியைத் தொடர முடியும். அந்த இலக்கை அடைய நாங்கள் கடுமையாக உழைப்போம்” என்று நேற்று ஞாயிற்றுக்கிழமை அவர் கூறினார்.