Home One Line P1 பன்மொழிச் சூழலில் மழலையர் மொழிக்கல்வி மாநாடு – தமிழ் மொழிக் காப்பகமும் முரசு நிறுவனமும் இணைந்து...

பன்மொழிச் சூழலில் மழலையர் மொழிக்கல்வி மாநாடு – தமிழ் மொழிக் காப்பகமும் முரசு நிறுவனமும் இணைந்து நடத்துகின்றன

1561
0
SHARE
Ad
ஊடகவியலாளர் சந்திப்பில் முத்து நெடுமாறன் – கு.நாராயணசாமி

கோலாலம்பூர் – கல்வி அமைச்சால் அங்கீகரிக்கப்பட்ட மலேசியத் தமிழ்மொழிக் காப்பகமும் முரசு நிறுவனமும் இணைந்து பன்மொழிச் சூழலில் மழலையர் மொழிக்கல்வி மாநாடு ஒன்றை கோலாலம்பூர் தேவான் பகாசா டான் புஸ்தாகாவில் வரும் ஏப்பிரல் 3ஆம் நாள் (3-4-2020 வெள்ளிக்கிழமை) நடத்தவிருக்கின்றனர்.

இம்மாநாடு தொடக்கநிலை மொழிக்கல்வியும் பன்மொழியும் என்னும் கருப்பொருளில் அமைந்துள்ளது. மழலையர் பள்ளிக்கும் தொடக்கப்பள்ளி முதல் படிநிலைக்கும் ஏற்ற பல்வேறு தமிழ்க் கற்றல் கூறுகளையும் காணவிருக்கின்றது. இங்கிலாந்து, சிங்கை, மலேசியா ஆகிய நாடுகளைச் சார்ந்த பொழிவாளர்கள் படைப்பு, கருத்தாடல், செயல்காட்சி முறைகளை வழிநடத்துவர். மலேசியத் துணைக்கல்வி அமைச்சர் தியோ நீ சிங் மாநாட்டைத் தொடக்கி வைப்பார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் முத்து நெடுமாறன்

ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழக இணைப்பேராசிரியர் முனைவர் சொனாலி நாக் முதன்மை உரை ஆற்றுவார். இவர் எழுத்தறிவு, மொழி மேம்பாடு பற்றிய ஆய்வுகள் மேற்கொண்டுள்ளார். முனைவர் சொனாலி மாணவர்கள் பன்மொழிக் கற்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி உரையாடுவார்.

#TamilSchoolmychoice

இரு உள்நாட்டு விரிவுரைஞர்கள் தங்கள் படைப்பை முன்வைப்பர். தமிழ்மலி சதாசிவன் (இனியன் – மேனாள் மூத்த கல்வியியல் விரிவுரைஞர், இல்மு காஸ் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, கோலாலம்பூர்) மொழிக்கற்றலுக்குரிய அடிப்படைக் கூறுகளை முன்வைப்பார்.

தெமங்கோங் இப்ராகிம் தமிழ்த்துறைத் தலைவரும் மூத்த விரிவுரையாளருமான திரு சேதுபதி, பள்ளிக்குப் புறத்தேயுள்ள சூழலில் கல்வி கற்றல் பற்றி எடுத்துரைப்பார். இருவரும் கல்வியியல் துறையிலும் ஆசிரியர்களைப் பயிற்றுவிக்கும் துறையிலும் பல ஆண்டுகள் பட்டறிவு உடையவர்கள்.

மழலையர் மொழிக் கல்வி மாநாட்டு ஏற்பாட்டுக் குழுவினர்…

இம் மாநாட்டில் இரு செயல்முறைக் காட்சிகள் பகிரப்படும். ஒன்று கதைகூறல்; இதனைச் சிங்கப்பூரைச் சார்ந்த, ஏகேடி கிரேஷன்ஸ் நிறுவனத்தின் ராணி கண்ணா செயல்படுத்துவார். மற்றது கவிதையும் சந்தப் பாடலும்; இதனைத் தமிழுலகமறிந்த பாப்பாவின் பாவலர் முனைவர் முரசு நெடுமாறன் அவர்தம் குழுவினரும் படைத்துக் காண்பிப்பர்.

கடந்த திங்கட்கிழமை (பிப்பிரவரி 3) மாலையில் பெட்டாலிங் ஜெயாவில் நடைபெற்ற மழலையர் மொழிக்கல்வி மாநாடு தொடர்பான ஊடகவியலாளர்கள் சந்திப்பு ஒன்றில் ஏற்பாட்டாளர்கள் மேற்கண்ட விளக்கங்களை அளித்தனர். முரசு நிறுவனம் சார்பில் அதன் தலைமைச் செயல்முறை அதிகாரி முத்து நெடுமாறனும் தமிழ்க் காப்பகம் சார்பில் அதன் துணைத் தலைவர் நாராயணசாமியும் விளக்கங்களை அளித்தனர்.

மலேசியத் தமிழ் மொழிக் காப்பகத்தின் துணைத்தலைவரும் நாடறிந்த கல்வியாளருமான உயர்திரு கு. நாராயணசாமி, இளம்பருவத்திலேயே மொழிக் கல்வியை வித்திட வேண்டும் என்று ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போது வலியுறுத்தினார். “மொழி மிகச்சிறந்த தொடர்புக் கருவி. மூன்று ஆண்டுகளில் மழலையர் சிறப்பாக மொழி கற்பர் என்று ஆய்வுகள் நிறுவுகின்றன” என்றும் அவர் தொடர்ந்து கூறினார்.

“குழந்தைகள் கசடற மொழி ஆளக் கற்றுக் கொடுப்பதே நாம் வழங்கும் சிறந்த பரிசாகும். இத்தகைய மாநாட்டை ஏற்று நடத்துவதில் பெருமிதம் கொள்கிறது கடந்த ஆண்டு மலர்ந்த மலேசியத் தமிழ்மொழிக் காப்பகம். கல்வி அமைச்சிற்கும் தேவான் பகாசாவிற்கும் நன்றி தெரிவிக்கிறேன்” எனவும் அவர் மேலும் கூறினார்.

முரசு நிறுவனத்தின் தோற்றுநரும் செயல்முறை அதிகாரியுமான முத்து நெடுமாறன், மலேசியா பன்மொழிக் கற்பதற்குரிய சிறந்த களத்தை வழங்குவதாகப் பெருமைகொண்டார். மாணவர்களின் மொழிக்கற்றல் எழுச்சி ஊட்டவும் களிப்பூட்டவும் அமைதல் வேண்டும் என்ற தனது வேட்கையை வெளிப்படுத்தினார். மேலும் கற்பித்தல் களத்தில் உள்ளவர்களுடன் இணைந்து களிப்பூட்டும் மொழிக்கற்றல் முறைகளை ஆய்வுசெய்ய ஆவலாய் உள்ளதாகக் கூறினார்.

இம் மாநாட்டில் முரசு நிறுவனம், மாணவர் கதைகளைப் படிக்கவும் மொழிசார்ந்த விளையாட்டுகளை ஆடவும் செயலிகளை இலவயமாக வழங்கும் என்றார் முத்து நெடுமாறன். இம்மாநாடு ஏறக்குறைய 600 ஆசிரியர்களையும் பெற்றோர்களையும் பங்கேற்பாளராக ஈர்க்கும் என்று ஏற்பாட்டாளர்கள் நம்புகின்றனர்.

பங்கேற்க ஆர்வமுள்ளோர் கீழ்க்காணும் இணைப்பின் வழி பதிவு செய்யலாம்:

http://bit.ly/2RPH1Kz