பெங்களூரு: தமிழ், தென்னிந்திய மற்றும் இந்தி திரைப்பட மூத்த நடிகரான கிரிஷ் கர்னாட் இன்று திங்கட்கிழமை காலை (இந்திய நேரப்படி) காலமானதாக இந்துஸ்தான் நாளிதழ் குறிப்பிட்டுள்ளது. 81 வயது நிரம்பிய அவர் நீண்ட நாள் நோய்வாய்ப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
அவர் நடிகராக, நாடக ஆசிரியராக மற்றும் இயக்குனராக வலம் வந்தவர். மேலும், ஞானபீட விருது பெற்றவர்.
காதலன், காதல் மன்னன், ரட்சகன் உள்ளிட்ட பல தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ள கிரிஷ் கர்னாட், பல பாலிவுட் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். கிரிஷ் கர்னாட், மேடை நாடகங்களிலும் தனக்கென தனிப் பெயரைப் பெற்றவர் ஆவார்.
பல ஆண்டுகளாக ஒரு முக்கிய நாடக ஆசிரியராக கர்னாட் திகழ்ந்தார். பெரும்பாலும், தற்கால வரலாற்றையும், தொன்மவியல், மற்றும் சமகாலத்திய பிரச்சினைகளை அவரது படைப்புகளில் அவர் வெளிப்படுத்தினார்.
பத்மஸ்ரீ மற்றும் பத்மபூஷன் போன்ற விருதுகளை அவர் இந்திய அரசிடமிருந்து பெற்றுள்ளார். மேலும், நான்கு பிலிம்பேர் விருதுகளையும் வென்றுள்ளார். அவற்றில் மூன்று சிறந்த கன்னட இயக்குனருக்கான விருதும், மற்றொன்று சிறந்த திரைக்கதைக்கான விருதும் ஆகும்.