பாண்டவர் அணி சார்பில் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் நடிகர்கள் பிரேம்குமார், அஜயரத்தினம், சிபிராஜ் ஆகியோர் நேற்று ஞாயிற்றுக்கிழமை தேர்தல் அதிகாரியை நேரில் சந்தித்து வேட்பு மனு தாக்கல் செய்தனர். பொருளாளர் பதவிக்கு போட்டியிடும் நடிகர் கார்த்தியின் வேட்புமனுவும் தாக்கல் செய்யப்பட்டது.
தலைவர் பதவிக்கு போட்டியிடும் நாசரை கமல்ஹாசன் முன்மொழிந்து வாழ்த்தினார். இந்நிலையில் செய்தியாளர்களுக்குப் பேட்டி கொடுத்த நடிகர் நாசர், நடிகர் சங்க தேர்தலில் எந்த அரசியல் குறுக்கீடும் இல்லை எனக் கூறியுள்ளார்.
“கடந்த முறை நாங்கள் தேர்தலை வேறொரு களத்தில் வேறொரு சூழ்நிலையில் சந்தித்தோம். இந்தமுறை வேறொரு களமாக இருக்கிறது. அதை சந்திக்க வேண்டியது எங்களது கடமை. நாங்கள் கடந்த மூன்று ஆண்டு காலம் செய்த பணிகள் சாட்சியாக நிற்கின்றன. அதை நம்பி நாங்கள் போட்டியிடுகிறோம். எங்கள் சங்க உறுப்பினார்களின் மிகப் பெரிய ஆதரவு பாண்டவர் அணிக்கு இருக்கும் என்று நம்புகிறேன்.” என நாசர் தெரிவித்துள்ளார்.
தலைவர் பதவிக்கு போட்டியிடும் நாசர் பாண்டவர் அணிக்கு ஆதரவாக கமல் உள்ளார். பாக்கியராஜ் தலைவர் பதவிக்கு போட்டியிடும் சுவாமி சங்கரதாஸ் அணிக்கு ரஜினிகாந்த் ஆதரவு கூறியுள்ளார். ரஜினியும் கமலும் எதிரெதிர் அணிக்கு ஆதரவளித்துள்ளது நடிகர் சங்க தேர்தலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.