ஆயர் குரோ: நாட்டில் உள்ள பொதுச் சேவை ஊழியர்கள் ஆளும் கட்சிக்கு கட்டுப்பட்டு இருக்காமல் சுதந்திரமாக தங்கள் கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என பிரதமர் மகாதீர் முகமட் கேட்டுக் கொண்டார்.
இருப்பினும், நாட்டின் நிருவாகம் நன்கு நிறுவப்பட்டிருப்பதை உறுதிப்படுத்த ஆளும் கட்சி தலைமையிலான அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் மற்றும் கொள்கைகளை அவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
“கடந்த பொது தேர்தல்களுக்கு பிறகு, மாநிலம் மட்டும் மத்திய அளவில் அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டது. இந்த மாற்றமானது ஒரு சிலருக்கு ஏற்றுக் கொள்ள கடினமாக இருக்கலாம். ஒரு சிலர் இன்னும் கடந்த கால அரசாங்கத்திற்கு விசுவாசமாக இருக்கலாம்” என பிரதமர் கூறினார்.
“ஜனநாயக முறையை நாம் ஏற்றுக்கொள்வதன் மூலமாக, ஜனநாயக முறையில் சில நேரங்களில் தேர்தல்களினூடாக அரசாங்கம் மாற்றம் காணும் பொழுது, அரசாங்க ஊழியர்கள் தங்களை ஆளும் அரசாங்கத்திடமிருந்து விடுவிக்க தெரிந்திருக்க வேண்டும்” எனவும் அவர் இன்று திங்கட்கிழமை தெரிவித்தார்.