Home நாடு ஜாகிர் நாயக் – சைருல் அசார் இருவரின் நிலைமையும் ஒன்றுதான் – மகாதீர் கூறுகிறார்

ஜாகிர் நாயக் – சைருல் அசார் இருவரின் நிலைமையும் ஒன்றுதான் – மகாதீர் கூறுகிறார்

808
0
SHARE
Ad

கோலாலம்பூர் – இந்தியாவால் நாடுகடத்தப்பட கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கும் ஜாகிர் நாயக்கின் நிலைமையும், ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்திருக்கும், மங்கோலிய அழகி அல்தான்துயா கொலை வழக்கில் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டிருக்கும் சைருல் அசார் உமாரின் நிலைமையும் ஒன்றுதான் என பிரதமர் துன் மகாதீர் கூறுகிறார்.

“அல்தான்துயா கொலை வழக்கில் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டிருக்கும் சைருல் அசார் ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்திருந்திருக்கிறார். அவரை மலேசியாவுக்குத் திருப்பி அனுப்ப நாம் கோரிக்கை விடுத்திருக்கிறோம். ஆனால், அவரைத் திருப்பி அனுப்பினால் அவருக்கு என்ன தண்டனை வழங்கப்படும் எனக் கேட்கும் ஆஸ்திரேலியா அவருக்குத் தூக்குத் தண்டனை வழங்கப்படும் என்பதால் திருப்பி அனுப்ப மறுக்கிறது. அதே போன்று ஜாகிர் நாயக்கைத் திருப்பி அனுப்ப இந்தியா கோருகிறது. அவரை அங்கு அனுப்பினால் அவருக்கு என்ன மாதிரியான தண்டனை வழங்கப்படும் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். எனவே அவருக்கு அங்கே நியாயமான நீதி விசாரணை கிடைக்குமா என்பதை உறுதி செய்யும் பொறுப்பு நமக்கு இருக்கிறது” என மகாதீர் கூறியிருக்கிறார்.

மங்கோலிய அழகி அல்தான்துயா ஷாரிபு கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட சைருல் அசார் மேல்முறையீட்டு நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டவுடன் உடனடியாக ஆஸ்திரேலியா புறப்பட்டு சென்றார். எனினும், பின்னர் மேல்முறையீட்டில்  கூட்டரசு நீதிமன்றம் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை நிராகரித்து சைருல் மீதான தூக்குத் தண்டனையை மறுஉறுதிப்படுத்தியது.

#TamilSchoolmychoice

இதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் உள்ள குடிநுழைவுத் துறை இலாகாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சைருல் அசாரை மலேசியாவுக்குத் திருப்பி அனுப்ப ஆஸ்திரேலியா மறுத்து வருகிறது.