Home நாடு “ஹசிக் வீட்டை உடைத்து உள்ளே நுழையவில்லை” – காவல் துறை விளக்கம்

“ஹசிக் வீட்டை உடைத்து உள்ளே நுழையவில்லை” – காவல் துறை விளக்கம்

750
0
SHARE
Ad

கூச்சிங் – ஹசிக் அப்துல்லா அப்துல் அசிசின் தந்தை அப்துல் அசிஸ் இப்ராகிம் குற்றம் சாட்டியிருப்பதைப் போன்று நேற்று வியாழக்கிழமை (ஜூன் 13) இங்குள்ள ஹசிக் அப்துல்லா அப்துல் அசிஸ் இல்லத்தை உடைத்து தங்கள் தரப்பு உள்ளே நுழையவில்லை என காவல் துறை விளக்கமளித்துள்ளது.

சர்ச்சைக்குரிய அஸ்மின் அலி காணொளியில் இருந்த இருவரில் ஒருவர் நான்தான் என பகிரங்கமாக ஒப்புக் கொண்டவர்தான் சரவாக் சந்துபோங் தொகுதி பிகேஆர் கட்சியின் இளைஞர் பகுதித் தலைவரான இந்த ஹசிக் அசிஸ் ஆவார்.

இவர் இன்று வெள்ளிக்கிழமை மாலை கேஎல்ஐஏ 2 அனைத்துலக விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

#TamilSchoolmychoice

கூச்சிங் காவல் துறைத் தலைவர் துணை ஆணையர் அவாங் டின் அவாங் கனி இன்று அளித்த விளக்கத்தின்படி, நேற்று வியாழக்கிழமை மாலை 5.20 மணியளவில் கூச்சிங் பெத்ரா ஜெயாவில் உள்ள ஹசிக் அசிஸ் இல்லத்திற்கு சென்ற காவல் துறை குழுவில் இரண்டு உயர் அதிகாரிகளும் மூன்று அதிகாரிகளும் இடம் பெற்றிருந்தனர். ஹசிக் அசிசின் வாக்குமூலத்தைப் பெறவும் அவரது தற்போதைய இருப்பிடத்தைத் தெரிந்து கொள்ளவும் அவர்கள் அங்கு சென்றனர்.

“வீட்டு வாசலில் கார் ஒன்று நிறுத்தப்பட்டிருந்ததால் வீட்டினுள் இருந்தவரை அவர்கள் சில நிமிடங்களுக்கு அழைத்தனர். ஆனால் யாரும் பதிலளிக்கவில்லை. எனவே, பூட்டப்படாதிருந்த வாயிலைத் திறந்து அந்த வீட்டின் முகப்புக் கதவை அவர்கள் தட்டினர். அதன் பிறகே அப்துல் அசிஸ் (ஹசிக் அசிசின் தந்தையார்) கதவைத் திறந்தார். அதன் பின்னர் வந்திருந்த காவல் அதிகாரிகள் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு தாங்கள் வந்த காரணத்தையும் வீட்டில் உள்ளவர்களுக்குத் தெரிவித்தனர்” என அவாங் டின் விளக்கினார்.

காவல் துறை சட்டப்படியும் முறைப்படியும் தங்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் வரைமுறைகளுக்கு ஏற்பவும் நடந்து கொண்டதாகவும் அவாங் டின் அவாங் கனி தெரிவித்தார்.

ஹசிக் அசிசின் தந்தையார் இன்று வெள்ளிக்கிழமை காவல் துறையில் செய்த புகாரில் புக்கிட் அமான் காவல் துறை அதிகாரிகள் தனது வீட்டை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தனர் என குற்றம் சாட்டியிருந்தார்.