கோலாலம்பூர்: நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்ட சாந்துபோங் பிகேஆர் கட்சியின் இளைஞர் பகுதித் தலைவர் ஹசிக் அப்துல்லா இன்று சனிக்கிழமை மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு விடுவிக்கப்படுவார் என அவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.
ஓரினச் சேர்க்கை குறித்த காணோளி மற்றும் அக்காணொளி குறித்து ஹசிக்கின் ஒப்புதல் குறித்து விசாரிக்கப்பட்டதாகவும், அதனையடுத்து அவர் இன்று மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக கொண்டு வரப்பட்டதாகவும் அவர் கூறினார்.
விசாரணைகள் 24 மணி நேரத்திற்கு மேல் நீட்டிக்கப்பட வேண்டுமானால் காவல் துறையினர் மாஜிஸ்திரேட்டிடமிருந்து காவலில் ஒப்படைப்பதற்கான உத்தரவைப் பெற வேண்டும் என அவர் விளக்கினார்.
முன்னதாக மூலத் தொழில் துணையமைச்சரின் அந்தரங்க செயலாளர் பதவிலிருந்து ஹசிக் இடைநீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கடந்த மே 11-ஆம் தேதி தம்முடன் இருந்தது பொருளாதார விவகார அமைச்சர் அஸ்மின் அலிதான் என்று ஹசிக் காணொளி வெளியிட்டதும் அது பரவலாகப் பகிரப்பட்டது. இது குறித்து கருத்துரைத்த, அஸ்மின் தமது அரசியல் வாழ்க்கைக்கு ஒரு சிலர் களங்கத்தை ஏற்படுத்த இம்மாதிரியான சதி வேலைகளில் ஈடுபட்டுள்ளதாகக் கூறினார்.
அஸ்மின் காணொளி குறித்த மேலும் கூடுதல் செய்திகள்:
- பொருளாதார விவகார அமைச்சர் அஸ்மின் அலி சம்பந்தப்பட்ட ஓரினச் சேர்க்கை காணொளியுடன் தம்மைத் தொடர்புபடுத்த வேண்டாமென ரபிசி ரம்லி வலியுறுத்தியுள்ளார்.
- நேற்று வெள்ளிக்கிழமை மாலை மணிலாவுக்கு பறந்து செல்ல முயன்ற போது, ஹசிக் அப்துல்லா அப்துல் அசிஸ் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். அவரது விமான டிக்கெட்டின் விவரங்களை அடிப்படையாகக் கொண்டு இது உறுதி செய்யப்பட்டதாக புக்கிட் அமான் குற்றவியல் புலனாய்வு துறை இயக்குனர் டத்தோ ஹுசைர் முகமட் தெரிவித்தார்.
- பொருளாதார விவகார அமைச்சரான அஸ்மின் அலிக்கு எதிராக ஓரினச் சேர்க்கை தொடர்பான காணொளியை வெளியிட்ட ஹசிக் அசிஸ் குறித்து ஐந்து மணி நேரத்திற்கு மேல் காவல் துறையில் வாக்குமூலம் கொடுத்ததாக மூலத் தொழில் துணையமைச்சர் ஷம்சுல் இஸ்கண்டார் முகமட் அகின் அறிக்கை ஒன்றின் வாயிலாகத் தெரிவித்தார்.