ஹாங்காங்: ஹாங்காங்கில் ஜனநாயகம் கோரி கடந்த 2014-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட குடை போராட்டத்திற்கு பிறகு கடந்த மூன்று வாரங்களாக நடந்த போராட்டம் மிக மோசமானது எனக் கூறப்பட்டுள்ளது.
சர்ச்சைக்குரிய ஒப்படைப்பு மசோதாவை இடைநிறுத்தம் செய்வதாக ஹாங்காங் நகரத் தலைவரின் நடவடிக்கை இருந்தபோதிலும், இலட்சக்கணக்கான மக்கள் தொடர்ச்சியாக ஹாங்காங்கின் வீதிகளில் இறங்கினர்.
அண்மையில், நடந்த போராட்டத்தில் ஒருவர் மாடியிலிருந்து தவறி விழுந்து இறந்ததகாகக் கூறப்படுகிறது. இந்த போராட்டத்தின் போது, காவல் துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கு இடையே நடந்த மோதலில் பலர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அணிவகுப்பில் சுமார் 2 மில்லியன் மக்கள் பங்கேற்றனர். சனிக்கிழமையன்று, ஹாங்காங்கின் உயர் அதிகாரி தலைமை நிருவாகி கேரி லாம், இந்த மசோதா நிறைவேற்றப்படுவது இடைநிறுத்தம் செய்யப்படும் என்றும், இம்மாதம் நடைபெறவிருக்கும் இரண்டாவது வாசிப்பு இரத்து செய்யப்படும் என்றும் கூறியிருந்தார்.
இந்த மசோதாவை மீண்டும் தொடங்குவதற்கான காலக்கெடு எதுவும் இல்லை எனவும் லாம் குறிப்பிட்டிருந்தார். மேலும், இந்த ஆண்டு அது நிறைவேற்றப்படாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஆனால், போராட்டக்காரர்களுக்கு, இடைநீக்கம் அல்லது மன்னிப்பு எதுவும் போதுமானதாக இல்லை. எந்த ஒரு முடிவான முடிவையும் அரசு அறிவிக்காதது, மீண்டும் இது குறித்து கொண்டு வரப்படலாம் என்ற அச்சத்தை அவர்களிடத்தில் எழுப்பியுள்ளது. இதன் அடிப்படையில் லாமை பதவி விலகுமாறும், இந்த மசோதாவை முழுமையாக நிராகரிக்கவும் மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
“எங்கள் கோரிக்கைகள் எளிமையானவை. கேரி லாம் பதவியில் இருந்து வெளியேற வேண்டும், ஒப்படைப்பு சட்டம் திரும்பப் பெறப்பட வேண்டும். மேலும், காவல்துறையினர் தங்கள் சொந்த மக்களுக்கு எதிராக கடுமையான வன்முறையைப் பயன்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று முழக்கமிட்டனர்.
அரசியல் எதிர் கருத்து உடையவர்களுக்கு எதிராக செயல்படும் என கருதப்படும் சீனாவின் சட்டம் நிறைவேற்றப்பட்டால், ஹாங்காங்கில் குற்றவாளிகள் என சந்தேகிக்கும் நபரை சீனாவிடம் ஒப்படைக்கலாம்.