கோலாலம்பூர்: எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் செண்டெரியான் பெர்ஹாட் நிதி மோசடி தொடர்பான குற்றச்சாட்டுகள் சம்பந்தப்பட்ட நஜிப் ரசாக் மீதான இருபத்து ஏழாவது நாள் விசாரணை இன்று செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
முன்னாள் பிரதமரான நஜிப், 42 மில்லியன் ரிங்கிட் உள்ளடக்கிய நிதி மோசடி மற்றும் அதிகார விதிமீறல் காரணமாக மூன்று குற்றச்சாட்டுக்களை எதிர் நோக்கியுள்ளார். கோலாலம்பூர் உயர்நீதிமன்ற நீதிபதியான முகமட் நாஸ்லான் முகமட் கசாலியின் முன்னிலையில் நஜிப்பின் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.
கடந்த 2011-ஆம் ஆண்டில் நடந்த சந்திப்புக் கூட்டம் ஒன்றில் அமைச்சர் முன்னிலையில்லாமல், 2 பில்லியன் ரிங்கிட் கடனுக்காக எஸ்ஆர்சி இண்டர்நேஷனலுக்கு அரசாங்க உத்தரவாதங்களை வழங்குவதற்கான தீர்மானத்தை அமைச்சரவை நிறைவேற்றியது என முன்னாள் அமைச்சரவை பொதுச் செயலாளர் மசிடா அப்துல் மஜிட் சாட்சியமளித்தார்.
அமைச்சரவைக் கூட்டத்தின் நிகழிச்சிக் குறிப்பில் இந்த விவகாரம் குறித்த எந்தவொரு குறிப்புகளும் இடம்பெறவில்லை என மசிடா உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
அப்போதைய பிரதமரும் நிதியமைச்சருமான நஜிப் ரசாக் தலைமையில் அந்த அமைச்சரவைக் கூட்டம், கடந்த 2011-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17-ஆம் தேதி அன்று நடைபெற்றது.
மேலும், கூறிய மசிடா இந்த விவகாரம் குறித்த மனு கோரிக்கை நிதி அமைச்சகத்திலிருந்து கிடைக்கப் பெற்றதாகக் கூறினார்.
அந்த குறிப்பாணை எஸ்ஆர்சி இன்டர்நேஷனலுக்கு வரி விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்றும், பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு இக்கடனின் விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் தீர்மானிக்க அதிகாரம் வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்ததாக அவர் கூறினார்.