கோலாலம்பூர்: குறைந்த வருமானம் பெறும் பி40 குடும்பங்களுக்காக பக்காத்தான் ஹாராப்பான் அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டமான (மைசலாம்), மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருவதாக நிதி அமைச்சின் தகவல்தொடர்பு தலைவர் சாகியா ஹானும் காசிம் கூறினார்.
அரசாங்க மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது அல்லது ஒரு மோசமான நோயால் பாதிக்கப்படுவோருக்கு இந்த திட்டமானது பெருமளவில் உதவியாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
கடந்த ஜனவரி மாதம் தொடங்கப்பட்டிருந்தாலும், மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலும் 349,600 ரிங்கிட் அடங்கிய நிதி 2,474 பெறுநர்களுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
கடந்த ஜனவரி 24-ஆம் தேதி பிரதமர் மகாதீர் முகமட் மைசலாம் திட்டத்தை தொடக்கி வைத்தார். கிரேட் ஈஸ்டேர்ன் தாகாபுல் பெர்ஹாட் காப்புறுதி நிறுவனத்துடன் இணைந்து அரசாங்கம் இந்த முயற்சியில் இறங்கியது.
இத்திட்டத்தின் வாயிலாக புற்று நோய் மற்றும் இருதய நோய் உள்ளிட்ட 36 முக்கியமான நோய்கள் இருப்பது கண்டறியப்பட்டால் 8,000 ரிங்கிட் வரையிலும் காப்புறுதி வழங்கப்படுகிறது.
மேலும், மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சைப் பெறுவதற்கு தினமும் 50 ரிங்கிட் வரையிலும் உதவியாகத் தரப்படுகிறது. ஒரு வருடத்திற்கு சுமார் 700 ரிங்கிட் வரையிலும் மக்கள் உதவித் தொகையைப் பெறலாம். 18 வயதிலிருந்து 55 வயதுக்குட்பட்ட பிஎஸ்எச் உதவியைப் பெறுபவர்கள் மைசலாம் திட்டத்தின் வாயிலாக பலனடையலாம்.
இந்த திட்டம் குறித்த விழிப்புணர்வை மக்களிடத்தில் மேலும் விரிவுப்படுத்த நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவமனைகளில் முகப்பிடங்கள் அமைக்கப்படும் என்றும் சாகினா கூறினார்.