கோலாலம்பூர்: இன்று வெள்ளிக்கிழமை அஸ்ட்ரோ தமிழ்பிரிவுக்கான தலைவர் பொறுப்பிலிருந்து விலகுதாகத் தெரிவித்த டாக்டர் ராஜாமணிக்கு (68) அஸ்ட்ரோ தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டது.
இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில், வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறந்த உள்ளூர் வெளியூர் நிகழ்ச்சிகளை கொண்டு வருவதன் மூலம், பல்வகை மலேசிய சந்தையின் பொழுது போக்குத் தேவைகளை அஸ்ட்ரோ பூர்த்திச் செய்ய விரும்புவதாகவும், உள்ளூர் நிகழ்ச்சிகளுக்கு என்றும் முக்கியத்துவம் கொடுத்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
மேலும்,உள்ளூர் நிகழ்ச்சித் தயாரிப்புகளையும் திறமையாளர்களையும் அனைத்துலக அளவுக்குக் கொண்டுச் செல்வதில் தனது கடப்பாட்டைத் தொடர்ந்து செயல்படுத்தும் என்றும் அஸ்ட்ரோ குறிப்பிட்டுள்ளது.
1996-ஆம் ஆண்டில், நமது நாட்டில் அஸ்ட்ரோ தனியார் துணைக்கோள் தொலைக்காட்சி தொடங்கப்பட்டபோது, அதன் தமிழ்ப் பிரிவுக்கான பொறுப்பாளராக நியமிக்கப்பட்டவர் டாக்டர் இராஜாமணி.
கால ஓட்டத்தில் பல்வேறு தரப்புகளின் எதிர்மறை விமர்சனங்களையும் மீறி, தனது 22 ஆண்டுகால பணிக் காலத்தில், “வானவில்” என்ற பெயரில் ஒரே அலைவரிசையாகத் தொடங்கிய அஸ்ட்ரோ இந்தியப் பிரிவை 17 அலைவரிசைகளாக பிரம்மாண்ட வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு சென்றார் இராஜாமணி.
இன்றைக்கு 15 தமிழ் தொடர்பான அலைவரிசைகள், 2 இந்தி அலைவரிசைகள் என விரிவடைந்து, வணிக ரீதியாகவும் வெற்றிகரமாக செயல்பட முடியும் என்பதை நிரூபித்திருக்கிறது அஸ்ட்ரோ இந்தியப் பிரிவு.