கோலாலம்பூர் – 22 ஆண்டுகளுக்கு முன்னர், 1996-ஆம் ஆண்டில், நமது நாட்டில் அஸ்ட்ரோ தனியார் துணைக்கோள தொலைக்காட்சி தொடங்கப்பட்டபோது, அதன் தமிழ்ப் பிரிவுக்கான பொறுப்பாளராக நியமிக்கப்பட்டவர் தமிழகத்திலிருந்து வந்த டாக்டர் இராஜாமணி. அப்போது அவரது பின்புலம், தொலைக்காட்சித் துறை குறித்த திறன்கள் போன்றவை குறித்து பலரும் விரிவாக அறிந்திருக்கவில்லை.
ஆனால், கால ஓட்டத்தில் பல்வேறு தரப்புகளின் எதிர்மறை விமர்சனங்களையும் மீறி, தனது 22 ஆண்டுகால பணிக் காலத்தில், “வானவில்” என்ற பெயரில் ஒரே அலைவரிசையாகத் தொடங்கிய அஸ்ட்ரோ இந்தியப் பிரிவை 17 அலைவரிசைகளாக பிரம்மாண்ட வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு சென்றார் இராஜாமணி.
இன்றைக்கு 15 தமிழ் தொடர்பான அலைவரிசைகள், 2 இந்தி அலைவரிசைகள் என விரிவடைந்து, வணிக ரீதியாகவும் வெற்றிகரமாக செயல்பட முடியும் என்பதை நிரூபித்திருக்கிறது அஸ்ட்ரோ இந்தியப் பிரிவு.
இந்த சாதனைகளைப் புரிந்த இராஜாமணி நாளை ஜூன் 21-ஆம் தேதியோடு தனது அஸ்ட்ரோ பொறுப்புகளிலிருந்து விலகுகிறார் என்பது அவரை அறிந்தவர்களுக்கும், அவரது சாதனைகளை மதிப்பவர்களுக்கும் வருத்தம் தரக் கூடிய செய்தியாகும்.
அஸ்ட்ரோ இந்தியப் பிரிவை இந்த அளவுக்கு வளர்த்து விட்ட மனநிறைவோடு தனது பதவியிலிருந்து விலகும் எண்ணத்தை கடந்த சில ஆண்டுகளாகவே அவர் அஸ்ட்ரோ நிர்வாகத்திடம் தெரிவித்து வந்ததாகவும், தகுந்த மாற்று பொறுப்பாளரை அடையாளம் காணும்படி கேட்டுக் கொண்டதாகவும், அஸ்ட்ரோ வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்தியர்கள் அதிகமாகக் குடியிருக்கும் நாடுகளில் கூட தனியார் தொலைக்காட்சி நிலையங்கள் வெற்றிகரமாக இயங்கியதில்லை. சில நாடுகளில் சில வருடங்களுக்குப் பின்னர் இந்திய அலைவரிசைகளைக் கொண்ட தொலைக்காட்சி நிலையங்கள் மூடப்பட்ட வரலாறும் உண்டு.
நமது அண்டை நாடான சிங்கப்பூரில் கூட அரசாங்கத்தின் முழுமையான ஆதரவோடுதான் அந்நாட்டின் இந்தியத் தொலைக்காட்சி அலைவரிசைகள் வெற்றிகரமாக இயங்கி வருகின்றன.
ஆனால், இன்றைக்கு மலேசியாவில் அஸ்ட்ரோவின் இந்தியப் பிரிவு ஒரு தனியார் தொலைக்காட்சி நிலையமாக இருந்தும், உள்ளடக்க ரீதியாகவும், வணிக ரீதியாகவும் வெற்றிகரமாகச் செயல்பட்டு வருவதற்கு மூல காரணமாக விளங்கியவர் இராஜாமணி ஆவார்.
அஸ்ட்ரோவின் அனைத்து அலைவரிசைகளிலும், தமிழ்ப் பயன்பாடு, தமிழர்களின் கலை, கலாச்சாரப் பண்பாட்டுக் கூறுகள், உள்நாட்டு நாடகம் மற்றும் கலைவடிவங்கள் பரவலாக இடம் பெறுவதற்கு இராஜாமணி பெரும் முயற்சிகள் எடுத்து வந்தார்.
சிறந்த கல்விப் பின்னணியும் அனுபவமும் கொண்டவர்
அஸ்ட்ரோவுக்கு பொறுப்பாளராக 22 ஆண்டுகளுக்கு முன்னர் அவர் மலேசியாவில் காலடி வைத்தபோதே, சிறந்த கல்விப் பின்னணியையும், தொலைக்காட்சித் துறை அனுபவத்தையும் அவர் கொண்டிருந்தார்.
ஓர் அறிவியல் அறிஞராக வேண்டும் என்ற எண்ணத்தில் தான் பிஎஸ்சி கெமிஸ்ட்ரி படிப்பைத் தேர்ந்தெடுத்துப் படித்ததாகவும், ஆனால் தனது தந்தையின் திடீர் மறைவால், குடும்பத்திற்காக ஆசிரியராக பணியாற்ற எண்ணிய போது, அவரது கல்லூரிப் பேராசிரியர் ஊடகத்துறைக்கு செல்லுமாறு அறிவுரை கூறியதாகவும் அதைத் தொடர்ந்து சென்னைத் தொலைக்காட்சியில் பணிக்கு சேர்ந்ததாகவும் சில ஆண்டுகளுக்கு முன்னர் செல்லியல் ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில் இராஜாமணி தெரிவித்திருந்தார்.
அதன் பின்னர் திரைப்படத் துறையில் இந்தியாவின் முன்னணி கல்வி நிலையமான பூனா ஃபிலிம் இன்ஸ்டியூட்டில் பயிற்சி பெற்ற இராஜாமணி, 1989 -ல் நியூயார்க்கில் உள்ள சிராக்யூஸ் பல்கலைக்கழகத்தில் (Syracuse University) ஊடகத்துறையில் உயர்பட்டம் பெற்றார். ஊடகத்துறை படிப்பிற்கென முதல் தரமான கல்வி நிறுவனமான அந்தப் பல்கலைக்கழகத்தில் நடிப்பு, இயக்கம், தொலைக்காட்சி தயாரிப்பு போன்றவற்றில் உயர்நிலைக் கல்வியையும், பயிற்சியையும் பெற்றவர் இராஜாமணி.
தனது கல்வித் திறன்கள், பணி அனுபவங்கள் ஆகியவற்றோடு மலேசியா வந்து இங்கு அஸ்ட்ரோ இந்தியப் பிரிவை கருவிலிருந்து உருவாக்கி, மலேசிய இந்தியர்களுக்கு தொலைக் காட்சித் துறையில் மாபெரும் வளர்ச்சியை ஏற்படுத்தித் தந்திருக்கிறார் இராஜாமணி.
நமது நாட்டின் இந்தியர்களின் அடையாளமான தைப்பூசத் திருவிழாவை தொலைக்காட்சியின் வழியும், இணையம் வழியும், உலகம் எங்கும் இலட்சக்கணக்கான பக்தர்களுக்கு கொண்டு சென்று, அதற்காக சிறப்பு விருதுகளையும் அஸ்ட்ரோவுக்கு பெற்றுத் தந்ததில் இராஜாமணிக்கும் பெரும் பங்குண்டு.
அஸ்ட்ரோவில் இருந்து பிரியாவிடை பெறும் இராஜாமணி தனது அடுத்த கட்ட பணிகளிலும், பயணங்களிலும் வெற்றி பெற நல்வாழ்த்து கூறுவோம்!
-இரா.முத்தரசன்