புது டில்லி: கடந்த ஜூன் 3-ஆம் தேதி காணாமல் போன இந்தியாவின் ஏஎன் 32 ரக விமானத்தில் பயணம் செய்த 13 பேரும் உயிரிழந்ததாக இந்திய விமானப்படை அண்மையில் உறுதிப்படுத்தியிருந்தது.
இந்திய விமானப்படையின் ஏஎன் 32 விமானம் ஜுன் 3-ஆம் தேதி இந்திய நேரப்படி மதியம் 12.25 மணிக்கு அசாம் மாநிலம் ஜோர்கட்டிலிருந்து அருணாச்சல பிரதேசத்தின் மேசூகா பகுதிக்கு புறப்பட்டு மதியம் 1 மணியளவில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. இந்த விமானத்தில் 13 பேர் பயணம் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து இந்திய விமானப்படை, இந்திய இராணுவம் ஆகியவை தேடுதல் பணியில் ஈடுபட்டன. ஒருவாரக் கால தேடுதலுக்குப் பிறகு அவ்விமானத்தின் பாகங்கள் அருணாசல பிரதேசத்தின் லிப்போ பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டன. இந்நிலையில் ஏஎன் 32 விமானத்தில் பயணித்த 13 பேரும் உயிரிழந்ததாக இந்திய விமானப்படை தெரிவித்திருந்தது.
அதில் பயணம் செய்த 13 பேரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளதாக இந்திய விமானப் படை தெரிவித்துள்ளது. விமானத்தின் காக்பிட்டில் இருந்த வாய்ஸ் ரெக்கார்டர் மற்றும் கறுப்புப் பெட்டி ஆகியவையும் கைப்பற்றப்பட்டுள்ளன. அதை வைத்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்கப்படும் எனத் தெரிகிறது.