கோலாலம்பூர்: 1எம்டிபி பணத்தை திருப்பித் தருமாறு கட்டளையிடப்பட்ட 41 தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் பெயர்களைக் கொண்டிருந்த பறிமுதல் வழக்குகளின் பட்டியல் இறுதியானது இல்லை என்று நிதியமைச்சர் லிம் குவான் எங் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, பாஸ் கட்சியின் இளைஞர் பகுதியினர், எம்ஏசிசி வெளியிட்ட பட்டியலில் பாஸ் கட்சியின் பெயர் இடம் பெறவில்லை என்றும், அதனால் பாஸ் கட்சியை அவதூறாகப் பேசியதற்கு அனைவரும் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தது.
இருப்பினும், இன்று வியாழக்கிழமை இது குறித்து கருத்துரைத்த லிம் அப்பட்டியல் ஒரு ஆரம்பம் மட்டுமே என்று கூறினார். இன்னும் பலரின் பெயர்கள் அப்பட்டியலில் சேர்க்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
இதற்கிடையே, நஜிப்பின் கணக்கிற்கும் பின்னர் தனிநபர்களுக்கும் நிறுவனங்களுக்கும் சுமார் 270 மில்லியன் 1எம்டிபி பணம் மாற்றப்பட்டதை மீட்டெடுக்க, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் பிரிவு 56-இன் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கடந்த ஜூன் 21-ஆம் தேதி ஊழல் தடுப்பு ஆனையத் தலைவர் லத்தீஃபா கோயா கூறியிருந்தார்.