ஹைதராபாத் – ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பிக்பாஸ்’ தமிழ் நிகழ்ச்சியை கடந்த மூன்று வருடங்களாக கமல்ஹாசன் தொடர்ந்து தொகுத்து வழங்கி வருகிறார். இந்தியில் சல்மான் கான் தொகுத்து வழங்கினார்.
தெலுங்கில் கடந்த ஆண்டில் பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் தொகுத்து வழங்கினார். இந்த ஆண்டு அவருக்குப் பதிலாக பிரபல நடிகர் நாகார்ஜூனா அக்கினேனி தொகுத்து வழங்குகிறார் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகை அமலாவின் கணவரான நாகார்ஜூனாவின் இரண்டு புதல்வர்களும் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களாகத் திகழ்ந்து வருகின்றனர். நாகார்ஜூனாவின் முதல் மனைவிக்குப் பிறந்தவரான நாகசைதன்யா நடிகை சமந்தாவைத் திருமணம் செய்தார். நாகார்ஜூனாவின் இரண்டாவது மனைவிக்குப் பிறந்தவரான அகில் தெலுங்கில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார்.
தனது மகன்களுக்கு இணையாக இன்னும் இளமைத் துள்ளலோடு நடித்து வரும் நாகார்ஜூன் தமிழிலும் புகழ்பெற்ற பிரபல பழங்கால நடிகர் ‘தேவதாஸ்’ புகழ் நாகேஸ்வரராவின் புதல்வராவார்.
இவர்களின் குடும்பத்திற்குச் சொந்தமான அன்னபூர்னா ஸ்டுடியோஸ் படப்பிடிப்புக் கூடத்திற்கு சொந்தமான இடத்தில்தான் தெலுங்கு பிக்பாஸ் 3-க்கான பிரம்மாண்ட அரங்கம் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது.
ஒரு நிகழ்ச்சிக்கு தலா 12 இலட்ச ரூபாய் நாகார்ஜூனா சம்பளமாகப் பெறுவார் என்றும் ஊடகங்கள் ஆரூடங்கள் தெரிவித்திருக்கின்றன.
தெலுங்கைத் தாண்டி தென்னிந்தியா முழுமையிலும் பிரபலமானவர் நாகார்ஜூனா என்பதால் இந்த முறை தெலுங்கு பிக்பாஸ் 3 மற்ற மாநிலங்களிலும் பரவலாகப் பார்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.