கோலாலம்பூர் – இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மலேசிய தடகள சங்கத்தின் (Malaysian Athletics Federation) தலைவருக்கான தேர்தலில் டத்தோ எஸ்.எம்.முத்து வெற்றி பெற்றார்.
சங்கத்தின் நடப்புத் தலைவர் கரிம் இப்ராகிமை முத்து தோற்கடித்து புதிய தலைவராகத் தேர்வு பெற்றார்.
தடகள சங்கத்தின் துணைத் தலைவராக இதுவரை பதவி வகித்த முத்து, சிலாங்கூர் மாநில தடகள சங்கத்தின் தலைவருமாவார்.
13 தடகள சங்கங்களின் 39 பிரதிநிதிகள் கலந்து கொண்ட தேசிய தடகள சங்கத்தின் ஆண்டுக் கூட்டத்தில் முத்துவுக்கு 21 வாக்குகள் கிடைத்த நிலையில் கரிமுக்கு 18 வாக்குகள் மட்டுமே கிடைத்தன.
2004 முதல் இரண்டு தவணைகளாக கரிம் தடகள சங்கத்தின் தலைமையேற்று நடத்தி வந்த வேளையில், முத்து அதே காலகட்டத்தில் அந்த சங்கத்தின் துணைத் தலைவராக பதவி வகித்து வந்தார்.
தேசிய அளவிலான விளையாட்டுச் சங்கங்களில் இந்தியர் ஒருவர் தலைமையேற்பது மிகவும் அபூர்வமான ஒன்றாகும்.
முத்து, மஇகா மத்திய செயலவையின் உறுப்பினர்களில் ஒருவருமாவார்.