பெர்மிங்ஹாம் (இங்கிலாந்து) – உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகளுக்கான வரிசையில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை மலேசிய நேரப்படி 5.30 மணிக்கு இங்கு நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா, கிரிக்கெட் விளையாட்டு பிறந்த நாடான இங்கிலாந்தைச் சந்திக்கிறது.
இதுவரை எந்த ஆட்டத்திலும் தோல்வி காணாத வீராட் கோலி தலைமையிலான இந்திய அணி இந்த ஆட்டத்திலும் வெற்றி பெற்று சாதனை படைக்குமா என இந்திய கிரிக்கெட் இரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இந்தியா இதற்கு முந்திய ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணியைத் தோற்கடித்தது.
இன்று நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா புதிய வடிவிலான சீருடையில் களமிறங்குகிறது. கிரிக்கெட் விளையாடும் நாடுகளுக்கான சீருடை வண்ணங்களில் இங்கிலாந்தும், இந்தியாவும் இளம் நீல வண்ணத்திலான சீருடையைக் கொண்டுள்ளன.
இன்று இரண்டு நாடுகளுமே மோதுவதால், இந்திய விளையாட்டாளர்களுக்கு புதிய சீருடை வடிவமைக்கப்பட்டு அந்த சீருடையில் அவர்கள் இன்று களமிறங்குகிறார்கள்.
இரண்டு நாடுகளுக்குமே இன்றைய ஆட்டம் மிக முக்கியமானதாகும். 2019 உலகக் கிண்ணப் போட்டிகளில் இதுவரை எந்த ஆட்டத்திலும் தோல்வியடையாத நாடாக இருக்கும் இந்தியா அந்தப் பெருமையை இங்கிலாந்தையும் தோற்கடித்துத் தக்க வைத்துக் கொள்ளுமா என்பதை இன்றைய ஆட்ட முடிவுகள் காட்டும்.
இந்தியா இன்னும் விளையாட வேண்டிய 3 ஆட்டங்களில் ஒரே ஒரு புள்ளியைப் பெற்றாலே போதும் – அரையிறுதி ஆட்டத்திற்குத் தகுதி பெற்றுவிடும்.
ஆனால் இங்கிலாந்தோ இன்றைய ஆட்டத்தில் இந்தியாவை வென்றால்தான் அடுத்த கட்டத்திற்குச் செல்ல முடியும். தோல்வியடைந்தால், அரையிறுதி ஆட்டத்திற்கு இங்கிலாந்து தகுதி பெறாது. மற்ற நாடுகள் ஏதாவது மோசமான நிலையில் தோல்வியடைந்து வெளியேறினால் மட்டுமே இங்கிலாந்துக்கு அரையிறுதி ஆட்டத்திற்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.
எனவே, இங்கிலாந்து தனது அத்தனை ஆற்றலையும் வெளிப்படுத்தி இந்தியாவைத் தோற்கடிக்க முயற்சி செய்யும் என்பதால் இன்றைய ஆட்டம் பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய சீருடை இந்திய கிரிக்கெட் அணிக்கு இன்று அதிர்ஷ்டத்தைத் தருமா?