பெர்மிங்ஹாம் (இங்கிலாந்து) – உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகளுக்கான வரிசையில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா வங்காளதேசத்தைத் தோற்கடித்து அரையிறுதி சுற்றுக்கு தேர்வாகியது.
முதல் பாதி ஆட்டத்தில் பேட்டிங் செய்த இந்தியா, 50 ஓவர்களை நிறைவு செய்தபோது 9 விக்கெட்டுகளை இழந்து 314 ஓட்டங்களை எடுத்தது. நேற்றைய ஆட்டத்திலும் சிறப்பாக விளையாடிய ரோஹிட் ஷர்மா 104 ஓட்டங்கள் எடுத்து 2019 உலகக் கிண்ணப் போட்டிகளில் நான்காவது சதமடித்த பெருமையைப் பெற்றிருக்கிறார்.
முதலில் விளையாடிய ரோஹிட் ஷர்மாவும், ராகுலும் விக்கெட்டுகளை இழப்பதற்கு முன்னர் இணைந்து 180 ஓட்டங்களைக் குவித்த காரணத்தால் இந்தியா தொடர்ந்து அதிகமான ஓட்டங்களை எடுக்க முடிந்தது.
அடுத்து இரண்டாவது பாதி ஆட்டத்தில் விளையாடிய வங்காளதேசம் 315 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு களமிறங்கியது. எனினும் 48 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த வங்காளதேசம், 286 ஓட்டங்களை மட்டுமே எடுக்க முடிந்தது.
இதைத் தொடர்ந்து இந்தியா 28 ஓட்டங்களில் வெற்றி பெற்றது.
அடுத்து ஜூலை 6-ஆம் தேதி இலங்கையுடன் மோதுகிறது இந்தியா. இதில் தோல்வியுற்றாலும் அதற்கு பாதிப்பில்லை.
நியூசிலாந்தா? இங்கிலாந்தா?
இன்று புதன்கிழமை நடைபெறும் மற்றொரு பரபரப்பான ஆட்டத்தில் இங்கிலாந்தும், நியூசிலாந்தும் மோதுகின்றன. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் இங்கிலாந்து அரை இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்று விடும்.
எனவே, இந்த ஆட்டத்தை கிரிக்கெட் இரசிகர்கள் பரபரப்புடன் எதிர்பார்க்கின்றனர்.