மான்செஸ்டர் – உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஜூலை 9-ஆம் தேதி இங்கு நடைபெறும் முதலாவது அரை இறுதி ஆட்டத்தில் இந்தியாவும், நியூசிலாந்தும் மோதுகின்றன.
கடந்த நான்கு உலகக் கிண்ணப் போட்டிகளில் ஒவ்வொரு முறையும் அரை இறுதி ஆட்டத்திற்கு தேர்வு பெறும் சாதனையை நியூசிலாந்து நிகழ்த்தி வந்திருக்கிறது.
ஒரு சிறந்த குழுவை வீராட் கோலி தலைமையில் கொண்டிருக்கும் – ரவி சாஸ்திரியின் திறமையான பயிற்சியின் கீழ் விளையாடி வரும் – இந்தியாவும் இந்த முறை உலகக் கிண்ணப் போட்டியைக் கைப்பற்ற கடும் போராட்டம் நடத்தும்.
முதற் சுற்றுப் போட்டிகளில் மோதிப் பார்க்க தயாராக இருந்த நியூசிலாந்துக்கும், இந்தியாவுக்கும் இடையிலான ஆட்டம் மழையின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.
எனவே, செவ்வாய்க்கிழமை நடைபெறவிருக்கும் இந்தியா – நியூசிலாந்து இடையிலான போட்டி பரபரப்பான ஒன்றாகவும் அதிகமாக எதிர்பார்க்கப்படும் போட்டியாகவும் திகழும்.
மற்றொரு அரை இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தும், ஆஸ்திரேலியாவும் மோதுகின்றன. இந்த ஆட்டம் எதிர்வரும் வியாழக்கிழமை ஜூலை 11-ஆம் தேதி நடைபெறுகிறது.
உலகக் கிண்ணத்திற்கான இறுதி ஆட்டம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஜூலை 14-ஆம் தேதி நடைபெறுகிறது.
இதற்கிடையில் நேற்று சனிக்கிழமை இந்தியாவும், இலங்கையும் மோதிய ஆட்டத்தில் இந்தியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கையைத் தோற்கடித்தது.
இலங்கை 50 ஓவர்களை நிறைவு செய்தபோது 7 விக்கெட்டுகளை இழந்து 264 ஓட்டங்களை எடுத்தது.
எனினும் இரண்டாவது பாதி ஆட்டத்தில் இந்தியா 43.3 ஓவர்களிலேயே 265 ஓட்டங்களை எடுத்தது – 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்தது.
இந்தியாவின் ரோஹிட் ஷர்மா நேற்றைய ஆட்டத்திலும் சதமடித்து 103 ஓட்டங்கள் எடுத்தார். இதனைத் தொடர்ந்து உலகக் கிண்ணத் தொடரில் அதிகமாக சதம் அடித்த விளையாட்டாளராக ரோஹிட் ஷர்மா திகழ்கிறார்.