Home Video “பத்து தொகுதியை சிறப்பாக உருமாற்றுவேன்” – பிரபாகரனுடனான செல்லியல் நேர்காணல் (பகுதி 2)

“பத்து தொகுதியை சிறப்பாக உருமாற்றுவேன்” – பிரபாகரனுடனான செல்லியல் நேர்காணல் (பகுதி 2)

1278
0
SHARE
Ad

(நம்பிக்கைக் கூட்டணி ஆட்சிக்கு வந்து இரண்டாம் ஆண்டில் நடைபோட்டுக் கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில், அந்தக் கூட்டணியைச் சேர்ந்த சில சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநில ஆட்சிக் குழு உறுப்பினர்கள், அமைச்சுப் பொறுப்புகளில் உள்ளவர்கள் என சிலரை நேர்காணலின் வழி சந்தித்து அவர்களின் கடந்த காலப் பணிகள், எதிர்காலத் திட்டங்கள், சந்தித்து வரும் சவால்கள் குறித்து செல்லியல் சார்பாக உரையாடினோம். அந்த வகையில் கூட்டரசுப் பிரதேசத்தின் பத்து நாடாளுமன்ற உறுப்பினர் ப.பிரபாகரனைச் சந்தித்து செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன் நடத்திய நேர்காணலின் இரண்டாவது பகுதி)

பத்து தொகுதி அடைந்து வரும் மேம்பாடு

பிரபாகரன் பிரதிநிதிக்கும் பத்து நாடாளுமன்றத் தொகுதி 70 விழுக்காடு வீடமைப்புகளையும், குடியிருப்புகளையும் கொண்டதாகும். இங்கே அதிகமாக மக்கள் பிரச்சனைகள் இருக்கின்றன. எஞ்சிய 30 விழுக்காடு தொகுதியில் மேம்பாட்டுத் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இவையும் குடியிருப்பு, வீடமைப்புத் தொடர்பான திட்டங்களாகும்.

“பிறந்தது முதல் நான் சுற்றித் திரிந்த பகுதி என்பதால் எனக்கு இந்தத் தொகுதியின் அறிமுகம் அதிகமாகத் தேவைப்படவில்லை. செலாயாங் பகுதி மட்டும் நான் அறியாத பகுதி என்பதால் அங்கு வருகை தந்து நிலவரங்களை அறிந்து கொண்டேன். சமூக நல உதவிகள் பெறும் நாடாளுமன்றத் தொகுதிகளில் பத்து கூட்டரசுப் பிரதேச மாநிலத்தில் இரண்டாவது நிலையில் இருக்கிறது. நகர்ப்புற ஏழ்மை இங்கு அதிகமாகக் காணப்படுகிறது. அதே போன்று மாநகரசபை (டேவான் பண்டாராயா) அடுக்கு மாடி வீடுகளும் மக்களுக்கு அதிகமாகத் தேவைப்படுகின்றன. என்னை நாடி வரும் பிரச்சனைகளில் சுமார் 300 பிரச்சனைகள் குடியிருப்புகள் தொடர்பானவை. அவற்றுக்கு முக்கியத்துவம் தந்து தீர்வு காண்கிறேன்” என்கிறார் பிரபாகரன்.

#TamilSchoolmychoice

மாநகரசபை 20 ஆயிரம் வீடுகளை மட்டுமே கொண்டிருக்கிறது, ஆனால் இந்த வீடுகளுக்கு விண்ணப்பித்தவர்களோ 70 ஆயிரம் பேர் எனக் கூறும் பிரபாகரன், சமூக நல இலாகாவுக்கு விண்ணப்பிப்பவர்களின் வருமானம் 900 ரிங்கிட்டாக இருக்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது – ஆனால் நகர்ப்புறங்களில் வசிப்பவர்கள் இதைவிடக் கூடுதலாக சம்பாதித்தாலும் ஏழ்மையையே எதிர்நோக்குகின்றனர் என்பதால் அந்த வருமான வரம்பை உயர்த்த வேண்டும் என சம்பந்தப்பட்ட அமைச்சுக்கு அழுத்தம் கொடுத்து வருவதாகவும் கூறினார்.

பத்து தொகுதியின் சந்தைகள்

பத்து தொகுதியின் அடையாளமாகவும் முக்கிய பொருளாதாரக் களங்களாகவும் இருப்பவை மூன்று சந்தைகள், செந்துல் பாசார், செலாயாங் சந்தை, ஜிஞ்சாங் 5 வது மைல் ஆகிய பகுதிகளில் இவை அமைந்துள்ளன. இவற்றை மேம்படுத்த முயற்சிகள் மேற்கொண்டு வருவதாகவும் புதிய செலாயாங் சந்தை நிறைவு செய்யப்பட்டு விட்டதாகவும் கூறினார் பிரபாகரன்.

பல ஆண்டுகளாக இழுபறியாக இருந்த பல விவகாரங்களுக்கும் தீர்வு கண்டுள்ளதாகக் கூறும் பிரபாகரன், கோழிகளுக்கான ஹலால் முறையிலான அறுப்புக் கூடம் அமைத்தது, 60 வருடங்களாக மக்கள் குடியிருந்து வரும் கம்போங் லண்டா பிரச்சனை, கம்போங் செம்படாக், கம்போங் ரயில்வே ஆகிய பிரச்சனைகளுக்கான தீர்வுகளை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடுகிறார்.

பள்ளிகளுக்கு உதவி

கல்வியின் முக்கியத்துவம் உணர்ந்து பள்ளிகளுக்கும், மாணவர்களுக்கும் உதவி செய்வதை தனது கடமைகளில் ஒன்றாகக் கருதுவதாகக் கூறுகிறார் பிரபாகரன். மாணவர்களுக்கு பள்ளி உபகரணங்களை வழங்கியிருப்பதோடு, பத்து தொகுதியில் உள்ள 39 பள்ளிகளில் 30 பள்ளிகளுக்கு தலா 10 ஆயிரம் ரிங்கிட் மானியம் வழங்கியிருப்பதாகவும், 9 பள்ளிகளுக்கு தலா 13 ஆயிரம் ரிங்கிட் மானியம் வழங்கியிருப்பதாகவும் தெரிவித்தார்.

பல்வேறு அமைச்சுகள், இலாக்காக்களோடு இணைந்து பொதுமக்களுக்கான நிகழ்ச்சிகளை நிறையப் படைத்து வருகிறார். மித்ரா போன்ற இந்தியர்களுக்கான அரசு அமைப்புகளை மக்களுக்கு நேரடியாகக் கொண்டு வந்து சேர்க்கும் வகையில் ஒரு திருவிழா (கார்னிவெல்) போன்ற சந்திப்பு நடத்தி, அதில் அரசு அமைப்புகளையும், மக்களையும் இணைக்கும் பணி நல்ல பலனைத் தந்திருப்பதாகவும் கூறுகிறார் பிரபாகரன்.

இன ஒற்றுமைக்காக நல்லெண்ண நடை

சீபீல்ட் ஆலய விவகாரத்தில் முகமட் அடிப் அடாம் மரணமடைந்ததைத் தொடர்ந்து பலஇன மக்களிடையே ஒற்றுமையையும் நல்லெண்ணத்தையும் வளர்க்கும் நோக்கில், அனைத்து இனங்களைச் சேர்ந்தவர்களும் குழுவாகச் சென்று பள்ளிவாசல், இந்து ஆலயம், கிறிஸ்துவ தேவாலயம், புத்த ஆலயம் என நல்லெண்ண வருகை தந்த நிகழ்ச்சி அனைவரின் பாராட்டையும் பெற்றது. இதுவும் பிரபாகரனின் முயற்சிகளில் ஒன்று.

கைத்திறன் பயிற்சிகளுக்கான கருத்தரங்கங்களையும் நடத்தி இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறோம் என்றும் மேலும் கூறுகிறார், நாடாளுமன்றத்திலேயே மிக இளவயது உறுப்பினரான பிரபாகரன்.

பிரபாகரனின் தொகுதிப் பணிகளுக்கான களமாகத் திகழ்கிறது ஒரு மாடி முழுக்க அமைந்திருக்கும் அவரது தொகுதி அலுவலகம். அதற்குரிய பணியாளர்கள் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்க, பிரச்சனைகளுக்காக தங்களின் நாடாளுமன்ற உறுப்பினரைத் தேடிவரும் மக்களுக்கு உடனுக்குடன் அவர்களின் பிரச்சனைகள் அறியப்பட்டு, தீர்வு காணும் முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.

பிரபாகரனோடு உரையாடியதிலிருந்து ஒன்றைப் புரிந்து கொள்ள முடிந்தது.

தனது கொள்கையை வலியுறுத்த சுயேச்சை வேட்பாளராகக் களம் கண்ட பிரபாகரன், எதிர்பாராத திருப்பங்களால் நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றுவிட்டாலும், அதை அதிர்ஷ்டமாகவோ, திடீர் வாய்ப்பாகவோ கருதி, அதில் சுகம் காணாமல், அந்த வாய்ப்புக்கு ஏற்ப இந்த இளம் வயதிலேயே தன்னை உருமாற்றிக் கொண்டிருக்கிறார். ஒரு நாடாளுமன்ற உறுப்பினராகக் கடுமையாக உழைக்கிறார். மக்களைச் சந்திக்கிறார். நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். பிரச்சனைகளுக்குத் தீர்வு காண பாடுபடுகிறார்.

அவரது உழைப்பும், பணிகளும் இவ்வாறு தொய்வில்லாமல் தொடர்ந்தால், எதிர்கால மலேசிய அரசியலில் பிரபாகரனுக்கும் ஒரு முக்கிய இடம் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.

-இரா.முத்தரசன்

நேர்காணலின் முதல் பகுதி கீழ்க்காணும் இணைப்பில் காணலாம்:

“இளைஞர்களுக்காகத் தொடர்ந்து குரல் எழுப்புவேன்” பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன் நேர்காணல் (பகுதி 1)

காணொளி வடிவம்:

பத்து நாடாளுமன்ற உறுப்பினர் ப.பிரபாகரனின் செல்லியல் நேர்காணலின் ஒரு பகுதியை காணொளி வடிவமாக கீழ்க்காணும் ‘செல்லியல் அலை’ இணையத் தளத்தில் காணலாம்: