நியூயார்க் – உலகின் முதல் நிலைப் பணக்காரராக உயர்ந்திருக்கும் அமேசோன் நிறுவனத்தின் உரிமையாளரான ஜெப் பெசோசுக்கும் அவரது மனைவி மெக்கன்சி பெசோசுக்கும் இடையிலான 25 வருட திருமண வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டுவரும் 38.3 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடைய உலகின் மிகப் பெரிய தொகை கொண்ட விவாகரத்து வழக்கு வெள்ளிக்கிழமையுடன் (ஜூலை 5) நிறைவடைந்தது.
இந்த விவாகரத்தின் மூலம் மெக்கன்சி பெசோஸ் பெறும் 38.3 பில்லியன் டாலர் அமெரிக்க டாலர் மதிப்புடைய (மலேசிய ரிங்கிட் மதிப்பில் 158.4 பில்லியன்) அமேசோன்.காம் நிறுவனப் பங்குகளின் காரணமாக உலகிலேயே மிகப் பெரிய பணக்காரப் பெண்மணியாக மெக்கன்சி விளங்குவார் என்றும் வணிக வட்டாரங்கள் கணிக்கின்றன.
நீதிமன்றம் விவாகரத்துக்கு அனுமதி அளித்ததும், அமேசோன் நிறுவனத்தின் 4 விழுக்காட்டுப் பங்குகள் – அதாவது 19.7 மில்லியன் பங்குகள் – மெக்கன்சியின் பெயரில் பதிவு செய்யப்படும் என கடந்த ஏப்ரலில் அமேசோன் நிறுவனம் பங்குச் சந்தைக்கு அனுப்பிய பதிவில் தெரிவித்தது.
உலகிலேயே மிகப் பெரிய இணையவழி விற்பனையாளராக அமேசோன் திகழ்கிறது.
ஜெப் பெசோஸ் தொடர்ந்து தனது 12 விழுக்காட்டுப் பங்குகளை அமேசோன் நிறுவனத்தில் கொண்டிருப்பார். இதன் மதிப்பு அமெரிக்க டாலரில் 114.8 பில்லியன் (மலேசிய ரிங்கிட் 474.9 பில்லியன்) ஆகும். இதன் மூலம் உலகின் மிகப் பெரிய பணக்காரராக ஜெப் பெசோஸ் திகழ்வார். அவரது மனைவி உரிமை கொண்டிருக்கும் பங்குகளுக்கான வாக்களிக்கும் உரிமையையும் ஜெப் பெசோஸ் கொண்டிருப்பார். இதனால், அமேசோன் நிறுவனம் தொடர்ந்து அவரது முழுக் கட்டுப்பாட்டில் இருந்து வரும்.
மெக்கன்சி கடந்த மே மாதத்தில் விடுத்த அறிவிப்பில், காலப் போக்கில் தனது சொத்தில் பாதியை அறப் பணிகளுக்காக வழங்குவேன் எனக் கூறியிருந்தார். வாரன் பஃபெட் மற்றும் பில் கேட்ஸ் போன்ற உலகப் பணக்காரர்கள் தொடங்கியிருக்கும் “சொத்துகளை நன்கொடை வழங்க உறுதியளிப்போம்” என்ற இயக்கத்தில் தானும் இணைவதாகவும் மெக்கன்சி அறிவித்திருந்தார்.