நியூயார்க் – உலகின் மிகப் பெரிய பணக்காரராக இருந்து விட்டால் அந்தப் பணத்தைப் பாதுகாப்பது பெரும் தலைவலிதான்! அதிலும் பணக்கார மனைவியும் அமைந்து – அந்த மனைவியை விவாகரத்து செய்யும் நிலைமை வந்தால் இரட்டைத் தலைவலிதான்!
அதுதான் நேர்ந்தது உலகின் முதல் நிலைப் பணக்காரராகக் கருதப்படும் அமேசோன் நிறுவனத்தின் உரிமையாளரான ஜெப் பெசோசுக்கும்!
தனது மனைவியை விவாகரத்து செய்யப் போவதாக கடந்த ஜனவரியில் ஜெப் பெசோஸ் அறிவித்ததைத் தொடர்ந்து அமேசோனின் நிலைமை என்னவாகும் – விவாகரத்துப் பிரச்சனையால் அந்நிறுவனத்தின் பங்குகள் ஜெப் பெசோஸ் மற்றும் அவரது மனைவி மெக்கன்சி பெசோஸ் இடையில் பிரித்துக் கொள்ளப்படுவதால் – நிறுவனத்தின் மதிப்பும் எதிர்காலமும் கேள்விக் குறியாகுமா – என்றெல்லாம் வணிக வட்டாரங்களில் கேள்விகள் தொடர்ந்து எழுப்பப்பட்டு வந்தன.
ஆனால், நேற்று வியாழக்கிழமை ஜெப் பெசோசும் அவரது மனைவியும் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் தங்களின் விவாகரத்தைத் தொடர்ந்து அமேசோன் பங்குகளைப் பிரித்துக் கொள்வதிலும் இணக்கத்தைக் கண்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளதைத் தொடர்ந்து அமேசோன் பங்குதாரர்கள் நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றனர்.
ஜெப் பெசோஸ் தனது மனைவியுடன் கண்டுள்ள உடன்பாட்டின்படி அமேசோனில் அவர் கொண்டிருக்கும் 143 பில்லியன் டாலர் மதிப்புடைய மொத்தப் பங்குகளுக்கும் ஏகபோக ஓட்டுரிமையை அவரே கொண்டிருப்பார். அவரது மனைவி மெக்கன்சி பெசோஸ் அந்தப் பங்குகளில் 25 விழுக்காட்டுக்கு உரிமையாளராக இருப்பார். இதன் மூலம், அமேசோன் தொடர்ந்து ஜெப் பெசோசின் ஏகபோகக் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும்.
விவாகரத்து உடன்பாட்டின் மூலம் மெக்கன்சி பெசோஸ் 36 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடைய பங்குகளைக் கொண்டிருப்பார். இது அமேசோனின் மொத்தப் பங்குடமையில் 4 விழுக்காடாகும்.