(நம்பிக்கைக் கூட்டணி ஆட்சிக்கு வந்து இரண்டாம் ஆண்டில் நடைபோட்டுக் கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில், அந்தக் கூட்டணியைச் சேர்ந்த சில சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநில ஆட்சிக் குழு உறுப்பினர்கள், அமைச்சுப் பொறுப்புகளில் உள்ளவர்கள் என சிலரை நேர்காணலின் வழி சந்தித்து அவர்களின் கடந்த காலப் பணிகள், எதிர்காலத் திட்டங்கள், சந்தித்து வரும் சவால்கள் குறித்து செல்லியல் சார்பாக உரையாடினோம். அந்த வகையில் கூட்டரசுப் பிரதேசத்தின் பத்து நாடாளுமன்ற உறுப்பினர் ப.பிரபாகரனைச் சந்தித்து செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன் நடத்திய நேர்காணல்)
கடந்த 14-வது பொதுத் தேர்தலில் மலேசிய அரசியல் இதுவரை சந்தித்திராத ஓர் அதிசயம் நிகழ்ந்தது பத்து நாடாளுமன்றத் தொகுதியில்! எதிர்க்கட்சிகளின் ஆதரவுக் காற்று வலுவாக வீசிய காரணத்தால், 2008 முதல் அந்தத் தொகுதியைத் தற்காத்து வந்திருக்கும் பிகேஆர் கட்சியின் தியான் சுவா எளிதாக வெற்றி பெறுவார் என கணிக்கப்பட்டது.
ஆனால் எதிர்பாராத விதமாக அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட, தேசிய முன்னணி சார்பில் போட்டியிட்ட கெராக்கான் கட்சியின் டொமினிக் லாவ் வெற்றி பெற்று விடுவார் என அரசியலாளர்கள் கருதினர்.
நம்பிக்கைக் கூட்டணியின் தலைமையும், வேட்புமனு நிராகரிக்கப்பட்ட தியான் சுவாவும் ஒரு புதிய வியூகத்தை வகுத்தனர். அவர்களின் பார்வை சுயேச்சை வேட்பாளர்களின் பக்கம் சென்றது. சுயேச்சை வேட்பார்களில் ஒருவரை நம்பிக்கைக் கூட்டணி ஆதரிக்கும் என்றார் தியான் சுவா!
சுயேச்சை வேட்பாளர்களில் ஒருவராக வேட்பு மனுத் தாக்கல் செய்திருந்தார் 23 வயதே நிரம்பிய – பத்து தொகுதியின் கீழ்வரும் செந்துல் வட்டார மண்ணின் மைந்தன் – பிரபாகரன் என்ற இளைஞர். அவருடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் நம்பிக்கைக் கூட்டணியும், தியான் சுவாவும் அவருக்கு ஆதரவாகக் களத்தில் இறங்கினர். ஒரு பரப்புரைக் கூட்டத்தில் துன் மகாதீரே மேடையில் பிரபாகரனை அறிமுகப்படுத்தி தங்களின் ஆதரவைப் பகிரங்கப்படுத்தினார். விளைவு?
மலேசிய அரசியல் இதுவரைக் காணாத அளவுக்கு 38,125 வாக்குகள் பெற்று, கலவையான இன வாக்காளர்களைக் கொண்ட பத்து தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக வெற்றி பெற்றார் பிரபாகரன். அவரை எதிர்த்து நின்ற கெராக்கான், பாஸ் இரண்டும் இணைந்தே 24,297 வாக்குகள்தான் பெற முடிந்தது.
கெராக்கான் வேட்பாளரை விட 24,438 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்ற பிரபாகரன், பின்னர் அதிகாரபூர்வமாக பிகேஆர் கட்சியிலேயே இணைந்தார். நாடாளுமன்றத்தின் மிக இளைய வயது உறுப்பினரான பிரபாகரன், ஈப்போ சாலையின் நான்காவது மைலில் அமைந்துள்ள விசாலமான தனது புதிய அலுவலகத்தில் அமர்ந்து கொண்டு, தனது தொகுதியின் பல்வேறு நிலவரங்கள் குறித்தும், தனது அரசியல் பிரவேசம் குறித்தும் உரையாடினார்.
நாடாளுமன்ற உறுப்பினராக….தொகுதி களத்தில்….
“கட்சி சார்பு என்று மட்டும் இல்லாமல் சேவை மனப்பான்மையோடு இளைஞர்கள் அரசியலில் ஈடுபட வேண்டும் என்று கருதிய நான், நாமே அதற்கு முன்னுதாரணமாக இருப்போம் என எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி, பத்து தொகுதியில் போட்டியிட்டேன். தேர்தல் நடைமுறையில் பங்கெடுக்க வேண்டும் என்பதுதான் எனது நோக்கமே தவிர வெற்றி பெறுவதை நான் குறிக்கோளாகக் கொள்ளவில்லை. அதற்குப் பின்னர் நடந்தது அனைவருக்கும் தெரிந்ததுதான். அதற்குப் பின்னர் பிகேஆர் கட்சியில் சேர்ந்தேன். கடந்த ஓராண்டாக நாடாளுமன்றத்தில் புதிய முகங்களோடு அறிமுகம், நாடாளுமன்ற நடைமுறைகளை, சட்டவிதிகளை அறிந்து கொள்ளுதல், அரசாங்க இலாகாக்களின் பணிகளைப் பற்றி தெரிந்து கொள்ளுதல் என அனுபவப்பட்டு வருகிறேன்” என்று தொடங்கிய பிரபாகரனிடம், நம்பிக்கைக் கூட்டணியில் சேர ஏன் பிகேஆர் கட்சியைத் தேர்ந்தெடுத்தீர்கள் எனக் கேட்டோம்.
“தேர்தலில் போட்டியிடும் காலகட்டத்தில் கூட நான் பிகேஆர் ஆதரவாளராகத்தான் இருந்தேன். பிகேஆர் கட்சியின் தியான் சுவா தந்த ஆதரவு, சில மூத்த தலைவர்களிடம் பெற்ற ஆலோசனைகள் ஆகிய காரணங்களால் அந்தக் கட்சியில் இணைந்த நான், இணைப்புக்குப் பின்னர் அந்தக் கட்சியில் கடுமையாக உழைத்து வருகிறேன். எந்தப் பதவியையும் இதுவரை பெற்றுக் கொள்ளவில்லை. ஆனால் இன்னும் கற்றுக் கொள்ள விரும்புகிறேன். கட்சியின் அமைப்பு விதிகளையும், கட்டமைப்பையும் உன்னிப்பாகக் கவனித்து பின்பற்றி வருகிறேன். கடந்த ஓராண்டில் நடைபெற்ற எல்லா இடைத் தேர்தல்களிலும் கலந்து கொண்டு நம்பிக்கைக் கூட்டணிக்காக கடுமையாகப் பிரச்சாரம் செய்தேன். குறிப்பாக, ரந்தாவ் தொகுதியில் சுமார் 10 நாட்கள் எனது இளைஞர் குழாமுடன் அங்கேயே தங்கி பிரச்சாரங்களில் ஈடுபட்டேன். போர்ட்டிக்சன் தொகுதியிலும் பிரச்சாரங்கள் செய்தேன். பிகேஆர் கட்சி அரசியலுக்கு மெல்ல மெல்ல அனுபவப்பட்டு வருகிறேன்” என்கிறார் பிரபாகரன்.
நாடாளுமன்ற உறுப்பினராக ….நாடாளுமன்ற அவையில்….
“புதிய அரசாங்கம், ஆட்சி மாற்றம் என்பதால், நான் நாடாளுமன்றத்தில் நுழைந்தபோது, எந்தவித விளக்கக் கூட்டங்களும் தரப்படவில்லை. முதல் நாளில் எங்கு உட்காருவது, விவாதங்களின்போது எதற்கு கைதூக்குவது, எதற்கு மேசையைத் தட்டுவது என்பது தொடங்கி எப்படி பேசுவது, விவாதங்களில் எப்படி பங்கு கொள்வது என பலவற்றையும் நான் ஆரம்பத்திலிருந்து கற்றுக் கொள்ள வேண்டியதிருந்தது. தொடக்கத்தில் கொஞ்சம் தடுமாற்றம், நடுக்கம் இருந்தது உண்மைதான். இப்போது கற்றுக் கொண்டுவிட்டேன். நாடாளுமன்ற நடவடிக்கைகளில் தீவிரமாக செயல்படுகிறேன்”
“நாடாளுமன்றத்தில் எனது உரைகளில் இளைஞர்களின் பங்களிப்பு குறித்து அதிகமாகப் பேசுகிறேன். பல்வேறு அமைச்சர்களுக்கும் கேள்விகளை நாடாளுமன்றத்தில் எழுப்புகிறேன். 60 விழுக்காடு கேள்விகள் எனது தொகுதி குறித்தும் மீதி 40 விழுக்காடு கேள்விகள் தேசியப் பிரச்சனைகள் குறித்தும் சமர்ப்பிக்கிறேன். பின் இருக்கை நாடாளுமன்ற உறுப்பினராக (Back-bencher) எனது பணிகளை இயன்ற வரையில் முறையாகச் செய்து வருகிறேன். வயது முதிர்ந்தவர்களுக்காக அரசாங்க செலவிலேயே ஓர் ஓய்விடம் அமைக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். இளைஞர் சமுதாயத்தை வலுப்படுத்த வேண்டும் என பல தடவைகள் அறைகூவல் விடுத்து அதற்கான பரிந்துரைகளை செய்தேன். விளையாட்டுத் துறையில் இந்தியர்களின் தற்காப்புக் கலையான சிலம்பம் சுக்மாவில் இடம் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளேன்…” என தனது நாடாளுமன்றப் பணிகள் குறித்து அடுக்கிக் கொண்டே போகிறார் பிரபாகரன்.
அடுத்து :
“பத்து தொகுதியை சிறப்பாக உருமாற்றுவேன்” – பிரபாகரன் நேர்காணல் (பகுதி 2)
காணொளி வடிவம்:
பத்து நாடாளுமன்ற உறுப்பினர் ப.பிரபாகரனின் செல்லியல் நேர்காணலின் ஒரு பகுதியை காணொளி வடிவமாக கீழ்க்காணும் ‘செல்லியல் அலை’ இணையத் தளத்தில் காணலாம்: