கோலாலம்பூர்: இளையோர்களுக்கான வயது வரம்பை 40-லிருந்து 30-க்கு நிலைநிறுத்தும் பரிந்துரையில் ஜோகூர் அரண்மனையின் தலையீடு சம்பந்தமான ஆதாரங்கள் இருந்தால், அம்முடிவை மத்திய அரசாங்கம் இரத்து செய்யும் என்று பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூறினார்.
எந்தவொரு மத்திய அரசின் முடிவிலும் அரண்மனைக்கு தலையிட உரிமை இல்லை என்று டாக்டர் மகாதீர் கூறினார்.
இருப்பினும், அரண்மனையின் தலையீடு உள்ளதா இல்லையா என்பதை மத்திய அரசாங்கம் விசாரிக்குமா என்பதை டாக்டர் மகாதீர் விரிவாகக் கூறவில்லை.
இளைஞர் வயது வரம்பு தொடர்பான விவகாரத்தில் பல முறை மாற்றி பேசிய ஜோகூர் அரசாங்கம் இறுதியாக இந்த திட்டத்திற்கு எதிரான ஒரு நிலைப்பாட்டை எடுத்ததுடன், 40 வயதை இளைஞர் வயது வரம்பாக பராமரிக்க விரும்பம் தெரிவித்தது.
இளையோருக்கான வயது வரம்பை 40-ஆக சரவாக், சிலாங்கூர், பெர்லிஸ், பகாங், கிளந்தான் மற்றும் கெடா ஆகிய மாநிலங்களும் நிலை நிறுத்தி உள்ளன.
கடந்த ஜூலை 1-ஆம் தேதி, இளைஞர் விளையாட்டு துறை அமைச்சர் சைட் சாத்திக், இளையோருக்கான வயது வரம்பை 30-ஆக நிலை நிறுத்த, 2007-ஆம் ஆண்டுக்கான இளைஞர் மற்றும் இளைஞர் மேம்பாட்டுச் சட்டத்தின் கீழ் திருத்தங்களை மேற்கொள்ளும் மசோதாவை முன்வைத்தார்.