Home Video “2 ஆயிரம் ஏக்கர் கல்வித் தோட்டம் – எதற்காக எனது போராட்டம்?” – விளக்குகிறார் சிவநேசன்...

“2 ஆயிரம் ஏக்கர் கல்வித் தோட்டம் – எதற்காக எனது போராட்டம்?” – விளக்குகிறார் சிவநேசன் (பகுதி 2)

486
0
SHARE

(நம்பிக்கைக் கூட்டணி ஆட்சிக்கு வந்து இரண்டாம் ஆண்டில் நடைபோட்டுக் கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில், அந்தக் கூட்டணியைச் சேர்ந்த சில சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநில ஆட்சிக் குழு உறுப்பினர்கள், அமைச்சுப் பொறுப்புகளில் உள்ளவர்கள் என சிலரை நேர்காணலின் வழி சந்தித்து அவர்களின் கடந்த காலப் பணிகள், எதிர்காலத் திட்டங்கள், சந்தித்து வரும் சவால்கள் குறித்து செல்லியல் சார்பாக உரையாடினோம். அந்த வகையில் பேராக் மாநில ஆட்சிக் குழு உறுப்பினரும், சுங்கை சட்டமன்ற உறுப்பினருமான அ.சிவநேசனைச் சந்தித்து செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன் நடத்திய நேர்காணலின் இரண்டாவது பகுதி)

பீடோர் – பேராக் மாநிலத்தில் உள்ள பெரும்பாலான அரசாங்கத் தமிழ்ப் பள்ளிகளுக்கு அவற்றின் நிலம் உரிமையாக்கப்படவில்லை என்ற தனது ஆதங்கத்தைத் தெரிவித்து, கடந்த கால ஆட்சியினர் செய்யத் தவறிய முக்கியமான விவகாரம் இதுவென்றும் குறிப்பிட்ட சிவநேசன் அதற்கு உதாரணத்தையும் குறிப்பிட்டார்.

“உதாரணத்திற்கு கம்பார் தமிழ்ப் பள்ளியை எடுத்துக் கொள்வோம். இங்கு சுமார் 200 மாணவர்களும், 30 பாலர் பள்ளி மாணவர்களும் கல்வி கற்கின்றனர். இந்தப் பள்ளியின் முன்னாள் ஆசிரியராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் டான்ஸ்ரீ வீரசிங்கம் இருந்துள்ளார். இந்தப் பள்ளி வளாகத்தில் 320,000 ரிங்கிட் மதிப்புடைய மண்டபம் ஒன்றை நிறுவ, முன்னாள் மஇகா தலைவர் துன் சாமிவேலுவும் உதவியுள்ளார். ஆனால், இந்தப் பள்ளியின் நிலம் பள்ளிக்கு உரிமையானதல்ல. எனவே, கம்பார் தமிழ்ப் பள்ளிக்கே அந்த நிலம் வழங்கப்படுவதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளோம்” என்ற சிவநேசன் சித்தியவானில் அமைந்திருக்கும் மற்றொரு தமிழ்ப்பள்ளி  விவகாரம் குறித்தும் விளக்கினார்.

“சித்தியவானில் அமைந்திருக்கிறது கொலம்பியா தமிழ்ப் பள்ளி. இங்கே எலித் தொல்லையின் தாக்கம் மிகக் கடுமையாக இருக்கிறது. இந்தப் பள்ளி மாணவர்கள் கல்வி கற்க உகந்ததல்ல என சுகாதார அமைச்சும் அறிக்கை கொடுத்து விட்டது. இந்தப் பள்ளியை அடுத்து இருக்கும் நிலம் ஒரு முக்கியமான இந்திய அரசியல் தலைவருக்குச் சொந்தமானது. அவர் தரப்பை அணுகி இரண்டு ஏக்கர் நிலத்தை இந்தத் தமிழ்ப் பள்ளிக்கென ஒதுக்கித் தரமுடியுமா எனக் கேட்டோம். அப்படி கிடைத்தால் பள்ளியை விரிவாக்கிக் கொள்ளலாம், எலித் தொல்லையையும் ஒழிக்கலாம் என்ற நல்லெண்ணம்தான் அதற்குக் காரணம். சில காரணங்களைச் சொல்லி நில உரிமையாளர்கள் மறுத்து விட்டார்கள். இந்தத் தமிழ்ப் பள்ளியைக் காப்பாற்றவும், அந்தப் பள்ளியின் மாணவர்களின் நலன்களுக்காகவும் இப்போது அடுத்த கட்ட அதிரடியாக அந்த நிலத்திலிருந்து ஒரு பகுதியை அரசாங்கமே கையகப்படுத்தும் முயற்சியில் இறங்கியிருக்கிறோம்” என்ற சிவநேசன் மேலும் தொடர்ந்தார்.

“இதுபோன்று ஏராளமான பிரச்சனைகள் – கடந்த 60 ஆண்டுகளில் செய்யத் தவறியப் பிரச்சனைகளை இப்போது ஒவ்வொன்றாகத் தீர்த்துக் கொண்டு வருகிறோம். நானும் நாற்காலியில் சுகமாக அமர்ந்து கொண்டு சிலவற்றைக் கண்டும் காணாமல் இருந்து விட்டு எனது பதவிக் காலத்தைக் கடத்திவிடலாம். ஆனால் அப்படிச் செய்ய விரும்பவில்லை. அடுத்த 4 வருடங்களில் எல்லா அரசாங்கத் தமிழ்ப் பள்ளிகளுக்கும் அவர்களுக்குரிய நிலத்தை அதிகாரபூர்வமாக அரசாங்கப் பதிவேட்டில் இடம் பெறச் செய்வதை எனது குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வருகிறேன்” – ஆணித்தரமாக வலியுறுத்துகிறார் சிவநேசன்.

2 ஆயிரம் கல்வித் தோட்டம் நிலைமை என்ன?

சிவநேசனின் மனதுக்கு நெருக்கமான – பேராக் மாநிலத்துக்கே உரிய – இன்னொரு முக்கிய விஷயம் பேராக் இந்தியர்களின் கல்வி நலனுக்காக அவரது முயற்சியில் கிடைக்கப் பெற்ற 2 ஆயிரம் ஏக்கர் ‘கல்வித் தோட்டம்’ நிலம். இப்போது அதன் நிலைமை என்ன?

“எப்போதும் என்னிடம் கேட்கப்படும் கேள்வி, ஏன் இந்த 2 ஆயிரம் ஏக்கர் கல்வித் தோட்ட விவகாரத்தில் கை வைக்கிறீர்கள்! விட்டு விடுங்களேன் என்பதுதான். இந்தத் திட்டத்திற்கு நான் இடையூறு செய்யவில்லை. மாறாக, பேராக் மாநில இந்திய மாணவர்களின் நலன்களுக்காகத் திட்டமிடப்பட்டு தொடக்கப்பட்ட இந்தத் திட்டத்தின் மூலம் இதுவரையில் எந்த ஓர் உதவியும் எந்த ஓர் இந்திய மாணவனுக்கும் வந்து சேரவில்லை. சமூகத் திட்டங்களாகத் தொடங்கப்பட்ட பல திட்டங்கள் நாளடைவில் ஒரு குழுவினரின் ஆதிக்கத்தில் சிக்கிக் கொண்ட அவலம் போல் மீண்டும் ஒரு முறை நிகழக் கூடாது என்பதற்காகவும், இந்த கல்வித் தோட்டம் எப்போதும் பாதுகாப்புடன் இந்திய சமுதாய சொத்தாக இருக்க வேண்டும் என்ற அக்கறையுடன்தான் நான் செயல்பட்டு வந்திருக்கிறேன். அண்மையில் இந்த கல்வித் தோட்ட அறவாரியத்தின் உறுப்பினர்களோடு ஒரு சந்திப்புக் கூட்டம் நடத்தினேன். அவர்களும் வந்திருந்தனர். அறவாரிய உறுப்பினர்கள் அனைவருமே முதிர்ந்த வயது கொண்டவர்கள். தோட்ட நிர்வாகத்திலோ, தோட்டத் தொழிலிலோ அனுபவம் வாய்ந்தவர்கள் இல்லை.  இவர்களில் பெரும்பாலோர் கல்வித் துறை நிபுணர்களில்லை. கடந்த 16 மாதங்களாக இந்தத் தோட்ட நிலத்தில் அறுவடை நடைபெற்று வந்திருக்கிறது. சுமார் 3 மாதத்திற்கு முன்பாக எனக்கு ஒரு பக்கத்தில் ஓர் அறிக்கை அனுப்பப்பட்டது (அந்த அறிக்கையைக் காட்டுகிறார்). ஏப்ரல் 2018 தொடங்கி ஒவ்வொரு மாதமும் அறுவடை மூலம் கிடைத்த வருமானத்தை அதில் பட்டியிலிட்டிருக்கிறார்கள். அது ஒரு கணக்கறிக்கையோ, முறையாகத் தணிக்கை செய்யப்பட்ட கணக்குகளோ அல்ல. மொத்தம் 261,000 ரிங்கிட் வரவு என்று காட்டியிருக்கிறார்கள். மற்றபடி எந்த ஒரு விவரமும் இல்லை. இதனை நான் எப்படி ஏற்றுக் கொள்வது?” எனக் கேள்வி எழுப்புகிறார் சிவநேசன்.

“இந்த நிலத்தை எதிர்காலத்திலும் பாதுகாக்க இதன்மீது ‘பதிவாளர் கட்டுப்பாடு’ (Registrar’s caveat) ஒன்றை நில அலுவலகத்தில் பதிந்து வைத்திருக்கிறோம். இதன் காரணமாக, மாநில ஆட்சிக் குழுவின் ஒப்புதல் இல்லாமல் இந்த நிலத்தின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. தற்போது இந்த அறவாரியத்தில் 52 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். 9 இயக்குநர்கள் இருக்கிறார்கள். இதில் இயக்குநராக இருந்த மஇகா பேராக் மாநிலத் தலைவர் டத்தோ இளங்கோ, தான் மாநில அரசாங்கத்தைப் பிரதிநிதித்து அறவாரியத்தில் இடம் பெற்றிருந்ததாகவும், தற்போது தேசிய முன்னணி அரசு மாநில ஆட்சி பீடத்தில் இல்லாததால் பதவி விலகுவதாகவும் அறிவித்து விட்டார். அவருக்குப் பதிலாக மாநில அரசு சார்பில் யாரையும் அறவாரியம் இதுவரை நியமிக்காமல் தாமத்தித்து வருகிறது. ஆனால், இளங்கோவின் பெயர் இன்னும் அறவாரிய இயக்குநர் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறது. அறவாரிய சாசனப்படி மத்திய அரசாங்கத்தின் சார்பில் 3 பேரும் மாநில அரசாங்கத்தின் சார்பில் 3 பேரும் இடம் பெற்றிருக்க வேண்டும். ஆனால் இதுவரையில் அதனை நடைமுறைப்படுத்தவில்லை. முன்பு செடிக் தலைமை இயக்குநராக இருந்த என்.எஸ்.இராஜேந்திரன் அறவாரியத்தில் இடம் பெற பரிந்துரைக்கப்பட்டார். ஆனால் அவர் இன்னும் நியமிக்கப்படவில்லை. இவ்வாறாக, சில முறையற்ற நிலவரங்களை ஒழுங்குபடுத்தவும், இந்த 2 ஆயிரம் ஏக்கர் எல்லா காலத்திலும் பேராக் இந்திய மாணவர்களுக்குப் பயன்படும் விதத்திலும் வளர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கத்திற்காகவும்தான் நான் செயல்பட்டு வருகிறேன்” என நீண்ட விளக்கம் அளித்தார் சிவநேசன்.

  • அடுத்து: “முஸ்லீம் அல்லாதவர்களுக்கு 10 மில்லியன் நிதி ஒதுக்கீடு. இந்தியர்களுக்கு 1 மில்லியன் ஒதுக்கீடு” – செல்லியல் நேர்காணலில் சிவநேசன் (பகுதி 3)

அ.சிவநேசன் நேர்காணலின் முதல் பகுதி : “அரசாங்கத் தமிழ்ப் பள்ளிகளுக்கு சொந்த நிலம் கிடைக்க போராடுகிறேன்” செல்லியல் நேர்காணலில் சிவநேசன் (பகுதி 1)

அ.சிவநேசன் வழங்கிய செல்லியல் நேர்காணலின் ஒரு பகுதியை காணொளி வடிவமாக கீழ்க்காணும் இணைப்பில் காணலாம்:

Comments