Home Video “அரசாங்கத் தமிழ்ப் பள்ளிகளுக்கு சொந்த நிலம் கிடைக்க போராடுகிறேன்” செல்லியல் நேர்காணலில் சிவநேசன் (பகுதி...

“அரசாங்கத் தமிழ்ப் பள்ளிகளுக்கு சொந்த நிலம் கிடைக்க போராடுகிறேன்” செல்லியல் நேர்காணலில் சிவநேசன் (பகுதி 1)

1146
0
SHARE
Ad

பீடோர் – (நம்பிக்கைக் கூட்டணி ஆட்சிக்கு வந்து இரண்டாம் ஆண்டில் நடைபோட்டுக் கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில், அந்தக் கூட்டணியைச் சேர்ந்த சில சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநில ஆட்சிக் குழு உறுப்பினர்கள், அமைச்சுப் பொறுப்புகளில் உள்ளவர்கள் என சிலரை நேர்காணலின் வழி சந்தித்து அவர்களின் கடந்த காலப் பணிகள், எதிர்காலத் திட்டங்கள், சந்தித்து வரும் சவால்கள் குறித்து செல்லியல் சார்பாக உரையாடினோம். அந்த வகையில் பேராக் மாநில ஆட்சிக் குழு உறுப்பினரும், சுங்கை சட்டமன்ற உறுப்பினருமான அ.சிவநேசனைச் சந்தித்து செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன் நடத்திய நேர்காணல்)

கடந்த ஆண்டு பேராக் மாநில ஆட்சிக் குழு உறுப்பினராக அ.சிவநேசன் பொறுப்பேற்ற பின்னர் செல்லியல் நடத்திய விரிவான நேர்காணலில் பல்வேறு விவகாரங்கள் குறித்து தெளிவாகவும், ஒளிவு மறைவு இன்றியும் கூறியிருந்தார். அதன் பிறகு சுமார் ஓராண்டு இடைவெளிக்குப் பின்னர் கடந்த ஜூன் மாத இறுதியில் பீடோரில் அமைந்திருக்கும் அவரது சுங்கை சட்டமன்றத் தொகுதிக்கான சேவை அலுவலகத்தில் அமர்ந்து அவருடன் மீண்டும் உரையாடினோம்.

சிவநேசனுடன் உரையாடுவது தனிப்பட்ட முறையிலும், ஓர் ஊடகவியலாளர் என்ற முறையிலும் எப்போதுமே சுவாரசியமானது. பேராக் மாநில விவகாரங்களைப் புள்ளி விவரங்களோடு விரல் நுனியில் வைத்திருப்பார். ஒரு வழக்கறிஞராகவும் இருப்பதால் ஒரு விவகாரத்தின் சட்டரீதியான அம்சங்களையும், பிரச்சனைகளையும் நன்கறிந்து விளக்கம் தருவார். வார்த்தைகளை மென்று விழுங்காமல், பாரபட்சமின்றி உண்மைகளைப் பட்டென எடுத்துரைப்பார்.

#TamilSchoolmychoice

கடந்த ஓராண்டில் நீங்கள் கடந்து வந்த பாதையில் குறிப்பிடத்தக்க நிகழ்வுகள், சாதனைகள் என்ன, அடுத்த கட்டப் பணிகள் என்ன என்பது குறித்து வினவியபோது, “அந்த விவரங்களை நான் கூறுவதற்கு முன்னால் சில பொதுவான நடப்பு அரசியல் சூழ்நிலைகளை விவரிப்பது பொருத்தமாக இருக்கும் என்பதோடு, வாசகர்களுக்கும் சில உண்மை நிலவரங்கள் புரியும் எனக் கருதுகிறேன்” என்ற முன்னுரையோடு பேசத் தொடங்கினார் சிவநேசன்.

கடந்த ஜூலை 14-ஆம் தேதி கள்ளுக்கடை ஒன்றில் அதன் சுகாதாரம், தூய்மை குறித்து சிவநேசன் சோதனை நடத்தியபோது…

“நமது நாட்டில் கடந்த 60 ஆண்டுகால தேசிய முன்னணி ஆட்சியில் ஒரு முக்கியமான இனரீதியான அம்சத்தை மக்கள் மனங்களில் ஆழமாக விதைத்து விட்டார்கள். மலாய் அமைச்சர்கள் என்றால் மலாய்க்காரர் நலன்களைப் பார்த்துக் கொள்ள வேண்டும், சீன அமைச்சர்கள் என்றால், சீன சமூகத்தின் நலன்களைக் கவனித்துக் கொள்ள வேண்டும், இந்தியர் விவகாரங்களின் பொறுப்பு இந்திய அமைச்சர்களுக்கு – என எல்லாவற்றையும் இனரீதியாகவே  பிரித்துப் பார்த்து ஆட்சி செய்து வந்தார்கள். அந்த மனப்போக்கை மாற்றியமைப்பதுதான் எங்களின் மிகப் பெரிய போராட்டமாக கடந்த ஓராண்டில் அமைந்திருக்கிறது. அதனால்தான் 4 அமைச்சர்கள் இருந்தும் இந்தியர்களுக்கு என்ன செய்கிறார்கள் எனக் கேள்வி எழுப்புகிறார்கள். அவர்கள் இந்தியர்களாக இருக்கலாம். ஆனால், இந்தியர்களுக்கு மட்டும் அவர்கள் அமைச்சர்களில்லை. ஒட்டுமொத்த மலேசிய சமுதாயத்திற்கும் அவர்கள்தான் அமைச்சர்கள். ஓர் உதாரணமாகக் கூறுவதென்றால், பிரதமர் துறை அமைச்சர் வேதமூர்த்தி – கடந்த காலங்களில் ஹிண்ட்ராப் மூலமாக இந்தியர்களுக்குப் போராடியவர் – அண்மையக் காலமாக பூர்வ குடி மக்களின் நலன்களுக்காகப் பாடுபட்டு வருகிறார். இந்த மாற்றத்தை மக்களும் ஏற்றுக் கொண்டு முதிர்ச்சியான அரசியல் நிலைப்பாட்டை அவர்கள் ஏற்றுக் கொண்டால்தான் உண்மையான மாற்றங்கள் வரும்” எனத் தொடங்கிய சிவநேசன் பேராக் மாநிலப் பிரச்சனைகளைப் பற்றிப் பேச ஆரம்பித்தார்.

சுகாதார அமைச்சருடன் பூர்வ குடியினருக்கான நிகழ்ச்சி ஒன்றில் கடந்த ஜூலை 11-ஆம் தேதி கலந்து கொண்ட சிவநேசன்

“இதே போன்றுதான் பேராக் மாநிலத்திலும்! 2.6 மில்லியன் மக்கள் தொகை கொண்ட மாநிலம். இதில் 51 விழுக்காடு மலாய்க்காரர்கள், 33 விழுக்காடு சீனர்கள், 13 விழுக்காடு இந்தியர்கள், 2 விழுக்காடு பூர்வகுடி போன்ற மற்றவர்கள். பேராக் ஆட்சிக் குழு என்பது இவர்கள் அனைவருக்குமானது. இவர்கள் அனைவருக்கும் நாங்கள் பாடுபட வேண்டும். அதே போன்றுதான் எனது தொகுதியும். சுங்கை சட்டமன்றத் தொகுதியில் சுமார் 62 விழுக்காட்டினர் சீனர்கள், 21 விழுக்காட்டினர் இந்தியர்கள், 18 விழுக்காட்டினர் மலாய்க்காரர்களும் மற்றவர்களும். இவர்கள் அனைவரும் சேர்ந்துதான் என்னைத் தேர்ந்தெடுத்தார்கள். எனவே, அனைவருக்குமாக இனபேதமின்றி நான் உழைக்க வேண்டும். இதனை மலேசியர்கள் அனைவரும் புரிந்து கொண்டு புதிய சிந்தனையோடு பயணம் செய்தால்தான் மாற்றங்கள் இன்னும் வீரியத்துடன் செயல்படுத்தப்படும்” என்ற சிவநேசன் தொடர்ந்தார்.

“பேராக் மாநிலத்தில் சீனர்களுக்கென்றோ, மலாய்க்காரர்களுக்கென்றோ, இந்தியர்களுக்கென்றோ தனியாக ஆட்சிக் குழு உறுப்பினர் என்று இல்லை. ஆனால், பேராக் ஆட்சிக் குழுவில் இருக்கும் நான் மத்திய அரசாங்கத்தில் நான்கு அமைச்சர்கள் பார்க்கும் வேலையை தனி ஒருவனாக மாநில அளவில் பார்க்க வேண்டியுள்ளது. சுகாதாரம், பயனீட்டாளர் விவகாரம், இன ஒற்றுமை, மனித வளம் ஆகிய நான்கு துறைகள் எனக்கு ஒதுக்கப்பட்டிருக்கின்றன. இவை நான்குமே மத்திய அரசாங்கத்தில் தனித் தனி அமைச்சுகளாக இயங்குகின்றன. இவற்றோடு சேர்த்து பேராக் மாநிலத்தின் இந்தியர்களின் பிரச்சனைகள் அனைத்தும் என் பார்வைக்கு வருகின்றன. அவற்றுக்கும் நான் தீர்வு காண வேண்டும். இதையெல்லாம், நான் குறையாகச் சொல்லவில்லை. உழைப்பதற்கும் சேவைகளை வழங்குவதற்கும் நான் தயாராக இருக்கின்றேன். ஆனால், போகிற போக்கில் எங்கள் மீது குறை சொல்பவர்கள் இந்த அரசாங்க மற்றும் அரசியல் பின்னணியில் இருக்கும் பிரச்சனைகளையும் – எங்களுக்கென இருக்கும் சவால்களையும், தடங்கல்களையும் புரிந்து கொள்ள வேண்டும்” என்று விளக்கிய சிவநேசன் தனது மனதுக்கு நெருக்கமான விவகாரமான தமிழ்ப் பள்ளிகள் குறித்து பேசத் தொடங்கினார்.

ஜூலை 7-ஆம் தேதி பீடோர் துன் சம்பந்தன் தமிழப் பள்ளியில் நடைபெற்ற மலேசிய இந்து சங்கத்தின் திருமுறை ஓதும் விழாவில் சிவநேசன்…

“தற்போது பேராக்கில் 135 தமிழ்ப் பள்ளிகள் செயல்படுகின்றன. இதில் 49 பள்ளிகள் முழு உதவி பெறும் அரசாங்கத் தமிழ்ப் பள்ளிகளாகும். எஞ்சியவை பகுதி உதவிகள் பெறும் பள்ளிகளாகும். இந்தத் தமிழ்ப் பள்ளிகள், ஆலய விவகாரங்கள் என்று வரும்போது ஒன்றை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். எழுகின்ற புதிய பிரச்சனைகளை நாங்கள் கவனிக்க வேண்டிய அதே நேரத்தில் கடந்த 60 ஆண்டுகளில் தீர்க்கப்படாத, முடிக்கப்படாத பல விவகாரங்களையும் முந்தைய அரசாங்கத்தினர் செய்யத் தவறியதையும் சேர்த்தே நாங்கள் தீர்வு காண வேண்டியதிருக்கிறது. உதாரணத்திற்கு அரசாங்கத் தமிழ்ப் பள்ளிகளாக இயங்கும் பல பள்ளிகளுக்கு அவர்கள் அமைந்திருக்கும் பள்ளியின் நிலங்கள் சொந்தமானதாக இல்லை. அந்த நிலம் பள்ளிக்கென அரசாங்கப் பதிவேட்டில் இடம் பெறவில்லை. இதில் அபாயம் என்னவென்றால் நாளைக்கு மூன்றாவது தரப்பினர் ஒருவர் அந்த நிலத்தைக் கோரி அரசாங்கத்திற்கு விண்ணப்பித்து பெற்றுக் கொள்ள முடியும். ஒரு சிறப்புக் குழு அமைத்து ஆய்வு செய்ததில் பல பள்ளிகளுடைய நிலங்கள் அவர்களுக்கென பதிவு செய்யப்படவில்லை என்பதை உணர்ந்து, முதல் கட்டமாக இந்த 49 அரசாங்கத் தமிழ்ப் பள்ளிகளுக்கும் அவை அமைந்திருக்கும் நிலத்தின் உரிமை அதிகாரபூர்வமாகப் பதிவு செய்யப்பட வேண்டும் என்ற முயற்சியில் நான் தற்போது முழுமூச்சாக இறங்கியிருக்கிறேன்”  என்றார் சிவநேசன்.

அடுத்து : “பேராக் மாநில இந்தியக் கல்விக்காக வழங்கப்பட்ட 2 ஆயிரம் ஏக்கர் நிலத்தின் நிலைமை என்ன?” – செல்லியல் நேர்காணலில் சிவநேசன் விளக்கம் (பகுதி 2)

அ.சிவநேசன் வழங்கிய செல்லியல் நேர்காணலின் ஒரு பகுதியை காணொளி வடிவமாக கீழ்க்காணும் இணைப்பில் காணலாம்: