Home நாடு தோட்டத் தொழிலாளி முதல் பேராக் ஆட்சிக் குழு வரை…- சிவநேசனின் அரசியல் பயணம்

தோட்டத் தொழிலாளி முதல் பேராக் ஆட்சிக் குழு வரை…- சிவநேசனின் அரசியல் பயணம்

1312
0
SHARE
Ad

பீடோர்: (14-வது பொதுத் தேர்தலில் பேராக் மாநிலத்தில் பக்காத்தான் ஹரப்பான் கூட்டணி ஆட்சி அமைத்ததைத் தொடர்ந்து அம்மாநிலத்தின் ஆட்சிக் குழு உறுப்பினராக இரண்டாவது முறையாகப் பதவியேற்றிருக்கிறார் வழக்கறிஞர் அ.சிவநேசன். பல மாநிலங்களில் புதிய ஆட்சிக் குழு உறுப்பினர்களாகப் பதவியேற்றிருக்கும் பக்காத்தான் கூட்டணியின் இந்திய சட்டமன்ற உறுப்பினர்களை அறிமுகப்படுத்தும் செல்லியலின் நேர்காணல் வரிசையில் அவரையும் ஒருநாளில் அவரது மக்கள் சேவை மையம் அமைந்திருக்கும் பீடோர் நகரில் சந்தித்தோம். தனது அரசியல் பயணத்தின் தொடக்கம் முதல் பேராக் மாநில இந்தியர்களுக்கான தனது எதிர்காலத் திட்டங்கள் வரை சிவநேசன் விரிவாகப் பேசினார். நேர்காணல் தொடர்கிறது…)

பீடோர் – “நான் வாழ்ந்த பாகான் டத்தோ, கோலபெர்ணம் தோட்டத்தில் ஏறத்தாழ 4 வயது சிறுவனாக இருந்தபோது எனக்கு ஏற்பட்ட ஓர் அனுபவம் அப்படியே எனது நெஞ்சில் உறைந்து கிடக்கிறது. அந்த சம்பவம்தான் நான் ஒரு சமூகப் போராளியாகவும், அரசியல்வாதியாகவும் உருவாக விதைபோட்டது என நம்புகிறேன்” என்று கூறிவிட்டு அந்த சம்பவத்தை விவரிக்கத் தொடங்கினார் சிவநேசன்.

“ஒரு நாள் எனது தந்தையார் அச்சலிங்கம் என்னையும் எனது சகோதர சகோதரிகளையும் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு தோட்டத்தில் செல்லும் போது தூரத்தில் எதிரே ஒரு மோட்டார் சைக்கிள் வர உடனடியாக சைக்கிளை நிறுத்தி விட்டு எங்களையும் இறக்கி விட்டார். மத்தியான வேளையில்  மொட்டை வெயிலில் நாங்கள் காலணி கூட இல்லாமல் வெறுந்தரையில் நின்று கொண்டிருந்தோம். அந்த மோட்டார் சைக்கிள் எங்களைக் கடந்து செல்லும்போது எனது தந்தையார் அந்த மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவருக்கு சலாம் வைத்தார். பின்னர்தான் தெரிந்தது அந்த மோட்டார் சைக்கிளில் வந்தவர் தோட்டத்து வெள்ளைக்கார துரை என்பது. அப்போதே என்னிடம் ‘தமிழர்களின் வாழ்வு இவ்வளவுதானா’ என்ற எண்ணமும், இதுபோன்ற சமூக அநீதிகளை எதிர்த்துப் போராட வேண்டும் என்ற உத்வேகமும் முளை விட்டது” என்கிறார் சிவநேசன்.

பேராக் ஆட்சிக் குழு உறுப்பினராக…
#TamilSchoolmychoice

“கால ஓட்டத்தில் வரலாறு மாறிய அதிசயமும் நிகழ்ந்தது. 2008-ஆம் ஆண்டில் நான் ஆட்சிக் குழு உறுப்பினராக எனது 49-வது வயதில் பொறுப்பில் இருந்தபோது, எந்த வெள்ளைக்காரத் துரைக்காக எனது தந்தை சைக்கிளை விட்டு இறங்கி சலாம் வைத்தாரோ, அதே வெள்ளைக்கார முதலாளியின் மகன்கள் நான் பிறந்த வளர்ந்த அதே தோட்டத்திற்கு அதிகாரபூர்வ விருந்தினராக என்னை அழைத்து அங்கு வாழும் தொழிலாளர்களின் வாழ்க்கைச் சூழல்களை சுற்றிக் காட்டியது, இன்னொரு தனிக்கதை” என்று கூறி சிரிக்கிறார் சிவநேசன்.

10 சகோதர சகோதரிகளைக் கொண்ட குடும்பத்தில் பிறந்தவர் சிவநேசன். 5-ஆம் படிவத்தை முடித்ததும், தெலுக் இந்தான் ஜெண்ட்ராட்டா தோட்டத்தில் 3 ரிங்கிட் 30 காசு நாள் சம்பளம், 1 ரிங்கிட் 15 காசு கோலா என்ற வருமானத்தோடு தொழிலாளியாக அவரது வாழ்க்கை தொடங்கியது. பின்னர் யுனிவர்சிடி பெர்த்தானியான் செர்டாங் (தற்போது யுனிவர்சிடி புத்ரா) பல்கலைக் கழகத்தில் விஞ்ஞானக் கூடத்தின் உதவியாளராக (Laboratory Assistant) சேர்ந்தவர் அங்குள்ள தொழிற்சங்கத்தின் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொழிற் சங்கத்தில் காட்டிய தீவிர ஈடுபாடு அவரை எம்.டி.யு.சி எனப்படும் தேசிய தொழிற்சங்கக் காங்கிரசின் தேசிய உதவித்  தலைவர் பதவி வரை உயர்த்தியது.

தனது தொழிற்சங்க நடவடிக்கைகளின் காரணமாக அப்போதைய போக்குவரத்துத் தொழிலாளர் சங்கத்துக்கான செயலாளரும் ஜசெகவைச் சேர்ந்தவருமான மக்கள் தொண்டன் வி.டேவிட்டுடன் அறிமுகமும் பழக்கமும் ஏற்பட, பின்னர் பேராக் மாநிலத்தின் ஜசெக பிரமுகர் பி.பட்டுவுடன் பிணைப்பும் ஏற்பட, 1981-ஆம் ஆண்டில் ஜசெகவில் இணைந்தார் சிவநேசன். பின்னர் சட்டம் படிக்க இலண்டன் சென்றாலும், அன்று முதல் இன்றுவரை ஒரே கட்சி, ஒரே கொள்கை என்ற நிலைப்பாடுடன் அரசியல் களத்தில் நின்று பணியாற்றி வருகிறார் சிவநேசன்.

வழக்கறிஞராக…

தொழிற்சங்கப் பின்னணி காரணமாக வழக்கறிஞர் தொழிலில் ஈடுபட்டபோது தொழிலாளர்களுக்கான பல வழக்குகளைக் கையாண்டார் சிவநேசன். அவ்வப்போது சமூகம் சார்ந்த வழக்குகளிலும் பிரதிநிதித்து வழக்காடினார். “எனது வழக்கறிஞர் தொழிலில் இன்றுவரை ஒரு முதலாளிக்குக் கூட நான் வழக்கறிஞராகப் பணியாற்றியதில்லை. அனைத்து வழக்குகளும் தொழிலாளர்களைப் பிரதிநிதித்துப் போராடியவைதான்” எனப் பெருமிதத்துடன் கூறுகிறார் அவர்.

யுனிவர்சிடி பெர்த்தானியானில் பணியாற்றிக் கொண்டிருந்த போது, 1978-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பெட்டாலிங் தொகுதியில் போட்டியிட்ட லிம் கிட் சியாங் மற்றும் டாமன்சாரா தொகுதியில் போட்டியிட்ட வி.டேவிட் ஆகியோருக்காக தேர்தல் பணிகளில் உதவி செய்ய முற்பட்டவருக்கு இயல்பாகவே அரசியல் ஈடுபாடும் ஜசெக மீது பற்றும் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து 1981-இல் ஜசெக உறுப்பினரானார் சிவநேசன்.

பின்னர் 1982 பொதுத் தேர்தலில் செர்டாங் சட்டமன்றத் தொகுதிக்குப் போட்டியிட்ட பி.பட்டுவுக்கும் தேர்தல் பணியாற்ற அவருடனும் நெருக்கம் ஏற்பட்டது. 1999 பொதுத் தேர்தலில் பூச்சோங் தொகுதியில் போட்டியிட்ட வி.டேவிட்டுக்கு தேர்தல் களத்தில் பணியாற்றிய சிவநேசனுக்கு 2004 பொதுத் தேர்தலில் சுங்கை சட்டமன்றத்திற்குப் போட்டியிட முதன் முறையாக வாய்ப்பு வழங்கப்பட்டது.

அந்தத் தேர்தலில் மஇகா-தேசிய முன்னணி வேட்பாளர் டத்தோ ஆர்.கணேசனிடம் தோல்வியடைந்தாலும், தொடர்ந்து அந்தத் தொகுதியிலேயே மக்கள் சேவை மையம் அமைத்து உழைத்து வந்ததன் பலனாக மக்கள் ஆதரவைப் பெற்று 2008 பொதுத் தேர்தலில் இரண்டாவது முயற்சியில் சுங்கை சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார் சிவநேசன். இந்த முறை அவர் பெற்ற பெரும்பான்மை 1,454 வாக்குகள். தோற்கடித்தது மஇகா-வேட்பாளர் (டான்ஸ்ரீ) எஸ்.வீரசிங்கத்தை! இதற்கிடையில் 2007-இல் உதித்த ஹிண்ட்ராப் இயக்கத்தின் சட்ட ஆலோசகராகவும் தனது சேவைகளை வழங்கினார் சிவநேசன்.

2013 பொதுத் தேர்தலில், சுங்கை சட்டமன்றம் மசீசவுக்கு வழங்கப்பட்டது. அங்கு மசீச சார்பில் தமிழ் பேசும் கோ கிம் சுவீ என்ற வேட்பாளர் சிவநேசனை எதிர்த்து நிறுத்தப்பட்டார். அவரையும் 3,511 வாக்குகளில் தோற்கடித்த சிவநேசன் தொடர்ந்து 2018 பொதுத்தேர்தலில் மஇகா பேராக் மாநிலத் தலைவர் டத்தோ வி.இளங்கோவை 6,493 வாக்குகள் பெரும்பான்மையில் தோற்கடித்தார்.

இதன்மூலம், கடந்த 3 தவணைகளாக சுங்கை சட்டமன்றத் தொகுதியை வெற்றிகரமாகத் தக்கவைத்துக் கொண்டிருப்பதோடு, ஒவ்வொரு பொதுத் தேர்தலிலும் தனது வாக்குகள் பெரும்பான்மையை அவர் உயர்த்திக் கொண்டே வந்திருப்பதன் மூலம், அவரது மக்கள் சேவையையும், தொகுதிப் பணிகளையும் வாக்காளர்கள் தொடர்ந்து ஆதரித்து வந்திருக்கிறார்கள் என்பதைக் காணலாம்.

-இரா.முத்தரசன்

தொடர்புடைய முந்தையக் கட்டுரை:

பேராக் இந்திய சமூகத்துக்கான 2,000 ஏக்கர் – நடந்தது என்ன? நடப்பது என்ன? – சிவநேசன் விளக்கம்

அடுத்து:

  • இரண்டு முறை பேராக் மாநில ஆட்சிக் குழு உறுப்பினராக வழங்கிய சேவைகள் என்ன?
  • புதிய பக்காத்தான் ஹரப்பான் மாநில அரசாங்கத்தில் இந்தியர்களுக்கான எதிர்காலத் திட்டங்கள் என்ன?

அ.சிவநேசனின் நேர்காணல் தொடர்கிறது…அந்த நேர்காணலின் காணொளி வடிவத்தைக் கீழ்க்காணும் ‘செல்லியல் அலை’ இணைப்பில் காணலாம்