Home நாடு “தமிழ், சீனப் பள்ளிகளைத் தற்காத்துத்தான் பேசினேன்” – ஜோகூர் இராமகிருஷ்ணன் விளக்கம்

“தமிழ், சீனப் பள்ளிகளைத் தற்காத்துத்தான் பேசினேன்” – ஜோகூர் இராமகிருஷ்ணன் விளக்கம்

1576
0
SHARE
Ad

ஜோகூர்பாரு – அண்மையில் ஜோகூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டாக்டர் எஸ்.இராமகிருஷ்ணன் சட்டமன்றத்தில் உரையாற்றியபோது தெரிவித்த சில கருத்துகள் ஒருசில புலனக் குழுக்களால், சமூக ஊடகங்களில் திரித்து விமர்சிக்கப்பட்டு, அவர் தமிழ், சீனப் பள்ளிகளுக்கு எதிராகப் பேசிவிட்டார் என செய்திகள் பரப்பப்பட்டன.

இதுகுறித்து “செல்லியல்” தொடர்பு கொண்டபோது, அதற்கான விளக்கங்களை, சட்டமன்றத்தில் தான் ஆற்றிய உரையின் சட்டமன்றக் குறிப்புகளோடு தெளிவுபடுத்தினார் இராமகிருஷ்ணன்.

“சட்டமன்றத்தில் நான் பேசியபோது, தேசியப் பள்ளிகள் தற்போது இஸ்லாமிய மதரீதியான பள்ளிகள் போன்று உருமாறிவிட்டன  என பிரதமர் துன் மகாதீர் கூறியதைத்தான் எதிரொலித்தேனே தவிர நானாக அந்தக் கருத்தைக் கூறவில்லை. அதேவேளையில், நமது பலஇன மலேசிய நாட்டில் தமிழ், சீனப் பள்ளிகள் சிறப்பாக இயங்குகின்றன என மொழிவாரியானப் பள்ளிகளை நான் தற்காத்துப் பேசினேன். தமிழ், சீனப் பள்ளிகளில் பாடங்களுக்கான உள்ளடக்கங்கள் கல்வி அமைச்சால் தயாரிக்கப்படுகின்றன என்பதால் அந்தப் பள்ளிகள் அந்தப் பாட உள்ளடக்கங்களின் எல்லைகளை மீறி எதையும் கற்பித்துவிட முடியாது என்றும், கற்பிக்கப்படும் மொழிதான் தமிழ், சீனம் என வேறாக இருக்கிறது என்றும் நான் விளக்கியிருக்கிறேன். பன்மொழிகள் நாட்டில் பயன்படுத்தப்பட்டால் அதனால் நாடு மேலும் அதிகமான அளவில்தான் முன்னேறும் என்றும் கூறிய நான், தமிழ், சீன மொழிகளையும், அந்த மொழிப் பள்ளிகளையும் நாம் எப்போதும் தற்காத்து வருவோம் என்றும் வலியுறுத்தினேன்” என்று விளக்கமளித்தார் இராமகிருஷ்ணன்.

#TamilSchoolmychoice

“இந்த சட்டமன்ற விவாதங்கள் குறித்து ‘சினார் ஹரப்பான்’ மலாய் நாளிதழ் வெளியிட்ட செய்தியில் நான் கூறியதை திரித்து எழுதியிருந்தது அந்தப் பத்திரிக்கை. பிரதமர் கூறியதை நான் குறிப்பிட்டதாக சொல்லாமல், ‘தேசியப் பள்ளிகள் இஸ்லாமிய ரீதியாக மாறிவிட்டன’ என நானே கூறியதாக அந்தச் செய்தியில் எழுதப்பட, அது சில மலாய் குழுக்களால் எனக்கு எதிராகப் பரப்பப்பட்டது. அதே நேரத்தில் நான் தமிழ், சீனப் பள்ளிகளுக்கு எதிராகப் பேசியதாகவும் சில குழுக்கள், குறிப்பாக எனக்கு எதிராக மாநிலத்தில் செயல்படும் இந்தியர் சார்பு குழுக்கள் செய்திகளைத் திரித்துப் பரப்பின. அதனால்தான் நான் எனது விளக்கத்தை வழங்க வேண்டியதிருக்கிறது” என இராமகிருஷ்ணன் மேலும் தெரிவித்தார்.

தொடர்ந்து இதுகுறித்து மேலும் பேசிய இராமகிருஷ்ணன் “நான் ஜசெக கட்சியைச் சேர்ந்தவன் என்பதும், எனது பெக்கோக் சட்டமன்றத் தொகுதியில் அதிகமான சீன வாக்காளர்கள் இருக்கிறார்கள் என்பதும் அனைவருக்கும் தெரியும். இதில் மிகப் பெரிய ஆச்சரியம் என்னவென்றால், இந்த விவகாரம் பெரிதாக சமூக ஊடகங்களில்  விவாதிக்கப்பட்டு வந்தபோது எந்த ஒரு சீன நண்பரோ, ஆதரவாளரோ, கட்சிக்காரரோ அல்லது தொகுதி வாக்காளரோ என்னைத் தொடர்பு கொண்டு நான் அப்படிப் பேசினேனா என என்னிடம் கேட்கவில்லை. காரணம் அவர்களுக்கு நான் உண்மையில் பேசியது என்ன என்ற செய்தி சென்று சேர்ந்திருக்கிறது. நான் சொல்லாததைக் சொல்லியதாக ஒரு சில குழுக்கள் திரித்துக் கூறியதால்தான் இந்த விவகாரம் பெரிதாகப் பேசப்பட்டது” எனவும் தெரிவித்தார்.