கோலாலம்பூர்: நடிகர் விக்ரம் நடித்து நேற்று வெள்ளிக்கிழமை (ஜுலை 19) திரையிடப்படுவதாக ‘கடாரம் கொண்டான்‘ திரைப்படம் மலேசியாவில் தடை செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அதிகாரப்பூர்வமான விளக்கங்கள் வெளியிடப்படவில்லையானாலும், மலேசிய காவல் துறையினர் குண்டர் கும்பலைப் போல செயல்படும் காட்சிகள் அதிகம் இருந்ததால் இப்படம் தடை செய்யப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இத்திரைப்படம்தடை செய்யப்பட்டதைத் தொடர்ந்து மலேசியர்கள் தங்களது ஏமாற்றத்தை வெளிபடுத்தி வருகின்றனர்.
இத்திரைப்படத்தின் விநியோகஸ்தரான லோட்டஸ் ஃபைவ் ஸ்டார் தங்கள் முகநூல் பக்கத்தில் இது குறித்த ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். மலேசியாவின் திரைப்பட தணிக்கை வாரியத்தின் உத்தரவின்படி படம் இங்கு வெளியிடப்படாது என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மலேசியாவில் பரவலாக படமாக்கப்பட்ட இப்படம் நடிகர் கமல்ஹாசன் தனது மகள் அக்ஷராஹாசன் மற்றும் விக்ரம் ஆகியோரால் இணைந்து உருவாக்கப்பட்டது.
சரவாக்கை பிறப்பிடமாகக் கொண்ட நடிகை ஜாஸ்மின் காரும் இந்த படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமாகி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் படம் இதே போன்று மலேசியாவில் தடை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.