சியோல்: முதல் முறையாக சீனாவுடன் சேர்ந்து கூட்டாக கிழக்கு சீனக் கடல் பகுதியில் முன் திட்டமிட்ட பாதையில் சண்டை விமானங்களின் துணையோடு, விமான ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
இதற்குப் பதிலடியாக தமது ஜெட் விமானத்தை அனுப்பிய தென்கொரியா, எல்லை மீறி அவ்விமானங்கள் பறந்த போது தங்கள் சண்டை விமானங்கள் இயந்திரத் துப்பாக்கியாலும், சுடரொளித் துப்பாக்கியாலும் (flare gun) சுட்டு எச்சரித்ததாக தென் கொரியா தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக ரஷ்யா மற்றும் தென்கொரியா ஆகிய இரு நாடுகளுக்கும் ஜப்பான் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
கொரிய வான் பாதுகாப்பு அடையாள மண்டலத்தில் (காடிஸ்) நேற்று செவ்வாய்க்கிழமை காலை ரஷ்ய மற்றும் சீன விமானங்கள் நுழைந்ததாகத் தெரிவித்துள்ள தென்கொரியா, வெவ்வேறு ஏ-50 ரக ரஷ்ய விமானங்கள் இரு முறை அந்தத் தீவுகளுக்கு மேல் தங்கள் வான் பரப்பில் அத்துமீறியதாகவும் கூறியுள்ளது.
ஆயினும், இந்தக் குற்றச்சாட்டை ரஷ்யா மறுத்துள்ளது.
இந்த மண்டலத்தில் சமீப ஆண்டுகளில் ரஷ்ய, சீன குண்டு வீசும் விமானங்களும், உளவு விமானங்களும் அவ்வப்போது தற்செயலாக நுழைந்துள்ளன. ஆனால், ரஷ்யாவுக்கும் தென்கொரியாவுக்கும் இடையில் இதுபோன்ற ஒரு சம்பவம் நடப்பது இதுவே முதல் முறை.