Home நாடு நஜிப்பின் பெக்கான் தொகுதியில் விரைவில் இடைத் தேர்தலா?

நஜிப்பின் பெக்கான் தொகுதியில் விரைவில் இடைத் தேர்தலா?

788
0
SHARE
Ad

கோலாலம்பூர் – அடுக்கடுக்கான வழக்குகளைச் சந்திக்க நீதிமன்றங்களின் படிகளில் ஏறி இறங்கிக் கொண்டிருந்தாலும் முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் இதுவரையில் தனது அரசியல் எதிர்காலம் குறித்துக் கவலையில்லாமல் நடைபோடுபவர் போல் காணப்பட்டார்.

காரணம், இந்த வழக்குகள் கூட்டரசு நீதிமன்றம் வரை மேல்முறையீடுகளால் இழுத்துச் செல்லப்பட்டு முடிவடைய எப்படியும் மூன்றாண்டுகள் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 2021-ஆம் ஆண்டு மே மாதம் வரை இந்த வழக்குகளை நீடிக்க வைத்து விட்டால் அதன் பிறகு நஜிப் குற்றவாளி என இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டாலும், அவரது பெக்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கு இடைத் தேர்தல் வராது.

காரணம், அடுத்த பொதுத் தேர்தலுக்கு இரண்டு ஆண்டுகள் மட்டுமே எஞ்சியிருந்தால் அந்தத் தொகுதிக்கு இடைத் தேர்தல் நடத்த வேண்டியதில்லை என்கிறது சட்டம்.

வருமான வரி வழக்கால் நஜிப்பின் அரசியல் எதிர்காலம் கேள்விக் குறி!

#TamilSchoolmychoice

ஆனால், நஜிப் 1.69 பில்லியன் ரிங்கிட் வருமான வரி செலுத்த வேண்டும் என வருமான வரி இலாகா அவர் மீது தொடுத்திருக்கும் வழக்கு அவரது அரசியல் எதிர்காலத்தையே கேள்விக் குறியாக்கி இருக்கிறது. காரணம், அந்த வழக்கு விசாரணை வெகு விரைவில் முடிந்து விடும் என எதிர்பார்க்கப்படுவதோடு, அதன் மூலம் நஜிப் திவால் ஆக்கப்பட்டு, அதன் காரணமாக பெக்கான் தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்திருக்கின்றன.

பொதுவாக அரசாங்கத்திற்கு வருமானவரி பாக்கி இருந்தால், வருமான வரி இலாகா நீதிமன்றத்தில் உரியவரின் வருமானத்தையும் அதற்கு ஈடாக அவர் செலுத்த வேண்டிய வருமான வரியையும் குறிப்பிட்டாலே போதும் – அவர்களுக்கு சாதகமாக நீதிமன்றத் தீர்ப்பு கிடைத்து விடும்.

எனினும் இந்த வழக்கை எதிர்த்து நஜிப் மேல்முறையீடு செய்திருக்கிறார். அதே வேளையில் வருமானவரி இலாகாவினர் நஜிப்புக்கு எதிராக “உடனடி தீர்ப்பு” (summary judgment) ஒன்றை பதிவு செய்ய விரைவில் விண்ணப்பம் செய்யப்போகிறார்கள். இங்கேதான் நஜிப்பின் பெக்கான் தொகுதிக்கு ஆபத்து வருகிறது.

முகமட் நிசார் நஜிப்

உதாரணமாக ஒருவர் வங்கியில் கடன் பெற்று அந்தக் கடனைத் திரும்பச் செலுத்தாவிட்டால், அந்த வங்கி, குறிப்பிட்ட கடன்காரர் மீது இதுபோன்ற சம்மரி ஜட்ஜ்மெண்ட் என்ற உடனடி தீர்ப்பைப் பெறும். அதாவது, உரிய ஆவணங்களை வங்கி சமர்ப்பித்தால் போதும் – அதனை எதிர்கொள்ள பிரதிவாதி (கடன்காரர்) தரப்பில் எந்தவிதமான ஆணித்தரமான தற்காப்பு வாதங்கள் இல்லை என்பதையும் வங்கி நிரூபித்து விட்டால் – நீதிமன்றம் உடனடியாக தீர்ப்பை வங்கிக்குச் சாதகமாக வழங்கிவிடும்.

இந்த நிலைமைதான் இப்போது நஜிப்புக்கு!

வருமான வரி இலாகா உரிய ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, இவ்வளவு வருமானத்தை நஜிப் பெற்றிருக்கிறார் – அதற்காக அவர் இவ்வளவு வரி செலுத்த வேண்டும் – என நிரூபித்து விட்டால் போதும் – வருமானவரி இலாகாவுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டு விடும். அடுத்து உடனடியாக அந்தத் தீர்ப்பை வைத்து குறிப்பிட்ட நாட்களுக்குள் நஜிப் தீர்ப்புக்கான தொகையை செலுத்தாவிட்டால், அவர் மீது திவால் நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த வழக்குகளிலும் நஜிப் எதிர்போராட்டம் நடத்துவார் என்றாலும், அத்தகைய எதிர் வழக்குகளில் வெல்வதற்கான சாத்தியமும், நீண்ட காலம் இழுத்தடிப்பதற்கான வாய்ப்புகளும் மிகவும் குறைவாகவே இருக்கும் என சட்ட வல்லுநர்கள் கருதுகின்றனர். காரணம், அனைத்துமே ஆவணங்களின் அடிப்படையில்தான் நடைபெறுமே தவிர, சாட்சிகளின் வாக்குமூலங்கள் இத்தகைய வழக்குகளில் தேவைப்படாது. எனவே, விரைந்து நீதிமன்றங்கள் வழக்கை முடித்து விடும்.

அதன் காரணமாக, இந்த வழக்குகளின் போக்கு, நீதிபதிகளின் விரைவுத் தன்மையை வைத்து கூடிய சீக்கிரமே வழக்கு முடிவுக்கு வந்து விடும் வாய்ப்புகள் அதிகம்.

அடுத்த சில மாதங்களுக்குள் இது நடந்து முடிந்தாலும் ஆச்சரியமில்லை.

பெக்கான் தொகுதியை மீண்டும் அம்னோ தக்க வைக்குமா?

அவ்வாறு நஜிப் திவால் ஆக்கப்பட்டால், பெக்கான் தொகுதிக்கு நடைபெறும் இடைத் தேர்தலில் அனுதாப அலையினால் நஜிப் நிறுத்தும் வேட்பாளரே வெல்வதற்கான வாய்ப்பு அதிகம். அநேகமாக அவரது மகனே அங்கு வேட்பாளராக நிறுத்தப்படலாம். அவரது மூத்த மகன் முகமட் நிசார் நஜிப் ஏற்கனவே பெக்கான் அம்னோ தொகுதியின் இளைஞர் பகுதித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

எனவே, அவரையே அங்கு வேட்பாளராக நிறுத்துவதிலும் நஜிப்புக்கு பிரச்சனை எதுவும் ஏற்படாது.

அதுவும் தற்போது பாஸ் கட்சியும் இணைந்திருப்பதால் பெக்கான் நாடாளுமன்றத்தை அம்னோ-தேசிய முன்னணி மீண்டும் தக்க வைத்துக் கொள்வதில் சிரமம் ஏதும் இருக்காது.

ஆனால், அதே வேளையில் கூடியவிரைவில் பெக்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கு இடைத் தேர்தல் வருவதையும் நஜிப் தரப்பு தவிர்க்க முடியாது என்றே தோன்றுகிறது!

-இரா.முத்தரசன்