கோலாலம்பூர்: கடந்த 2014-ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் வங்கிக் கணக்கை முறைப்படுத்த தனது சொந்த பணம் 55,000 ரிங்கிட்டை பயன்படுத்தியதாக முன்னாள் அம்பேங்க் தொடர்புப் பிரிவு மேலாளர் ஜோஹானா யூ ஒப்புக் கொண்டுள்ளார்.
அவ்வாண்டு செப்டம்பர் 29-ஆம் தேதி, 906 என்ற எண்ணுடன் முடிவடையும் நஜிப்பின் கணக்கிலிருந்து கூடுதலாக 55,000 ரிங்கிட் வெளியேற்றப்பட்டது. 80,000 ரிங்கிட்டுக்கு கொடுக்கப்பட்ட காலோலைக்கு போதுமான இருப்பு இல்லாத காரணத்தால் இதை செய்ததாக அவர் கூறினார்.
ஜோ லோவின் செயலாளர் என்றறியப்படும் ஜோசி, ஜோ லோவுடன் தொடர்பு கொண்டு, நஜிப்பின் அம்பேங்க் கணக்கில் பணம் செலுத்த வேண்டிய அவசியம் குறித்து பேசிய உரையாடல்கள் பிளாக்பெர்ரி கைபேசியில் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
ஜோ லோ பின்னர் கீ கோக் தியாம் நிதியை வழங்குவதாக யூவுக்கு அறிவுறுத்தினார். ஆனால் அவர் மலாக்காவில் இருந்ததால் அவரை அனுக இயலவில்லை என்று கூறப்பட்டது.
கீ முன்னதாக ஜோ லோவின் கூட்டாளியாக அடையாளம் காணப்பட்டார். மேலும் நஜிப்பின் கணக்குகளில் பணம் செலுத்தும் பணியையும் செய்து வந்தார். அவர் மலேசியாவில் ஒரு பறிமுதல் வழக்குடன் தொடர்புடையவர்.