கோலாலம்பூர்: பாலியல் வன்கொடுமை மற்றும் பிற குற்றங்களில் ஈடுபடுவதற்கு காரணமாக இருக்கும் பெண்களிடமிருந்து ஆண்களைப் பாதுகாக்கும் பாலியல் வன்கொடுமை சட்டத்தை அறிமுகப்படுத்துமாறு சர்ச்சைக்குரிய பரிந்துரைக்கு பிகேஆர் செனட்டர் முகமட் இம்ரான் அப்துல் ஹமிட் மன்னிப்பு கோரியுள்ளார்.
இன்று வியாழக்கிழமை வெளியிட்ட ஓர் அறிக்கையில், அவர் நேற்று புதன்கிழமை மக்களவையில் முன்வைத்த பரிந்துரையை மீட்டுக் கொள்வதாகக் கூறியுள்ளார்.
பெண்கள், குடும்ப மற்றும் சமூக மேம்பாட்டு துணை அமைச்சர் ஹன்னா இயோ, பெண்கள் குழுக்கள், அரசியல்வாதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் முகமட் இம்ரானை கடுமையாக விமர்சித்த பின்னர் அவர் இந்த முடிவினை எடுத்துள்ளார்.
முன்னதாக, பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் முகமட் இம்ரானின் யோசனையை நிராகரித்தார். இது நியாயமற்றது என்றும் பெண்களை அவமதிக்கும் வகையில் இருப்பதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.