சென்னை: புத்ரி இஸ்காண்டார் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் கிட் சியாங் மற்றும் பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் பி. இராமசாமி தலைமையிலான மலேசிய பேராளர்கள் குழு நேற்று வியாழக்கிழமை இரவு ரேய்ன் ட்ரி தங்கும் விடுதியில் நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
சென்னையில் உள்ள மலேசியாவின் துணைத் தூதரக அதிகாரிகளுக்கும், சென்னையில் உள்ள மலேசியாவைச் சேர்ந்த மாணவர்களுக்கும் சிறப்பு விருந்து நிகழ்ச்சியை இந்த பேராளர் குழுவினருக்காக ஏற்பாடு செய்திருந்தனர்.
மாணவர்களுடனான சந்திப்பின் போது, மாணவர்கள் புதிய மலேசியாவின் உருவாக்கத்தில் தங்களின் பங்கினை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று இராமசாமி கேட்டுக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் சென்னைக்கான மலேசியத் துணைத் தூதரகத்தின் தலைவர் சரவணன் காரத்திகேயன் மற்றும் மலேசிய துணைத் தூதரகத்தின் கல்வி மற்றும் பயிற்சி பொறுப்பாளர் நூர் டாலியா அகமட் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சாவீதா மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப அறிவியல் நிறுவனம், ஸ்ரீ ராமச்சந்திர மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், மீனாட்சி உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி அகாடமி மற்றும் ராகாஸ் பல் மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த மலேசிய மாணவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.