கோலாலம்பூர்: மலேசியாவிலிருந்து லிம் கிட் சியாங்கை வெளியேறக் கூறிய பாஸ் கட்சி இளைஞர் பகுதித் துணைத் தலைவர் அகமட் பாட்லி, கூட்டாட்சி அரசியலமைப்பை புரிந்து கொள்ளத் தவறியுள்ளதாக புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் ராம் கர்பால் சிங் தெரிவித்துள்ளார். மலேசியாவிலிருந்து லிம் கிட் சியாங்கை வெளியேறச் சொல்வது கேலிக்குரியது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
“லிம் நாட்டை விட்டு வெளியேற எந்தவொரு நேரடி காரணமும் இல்லை. அவர் ஒரு மலேசியர். அவர் நாட்டுக்கு 50 ஆண்டுகால சேவையை வழங்கியவர். ஜாகீரைப் போல அவர் ஒரு குடிமகன் அல்லாதவர் அல்ல. இந்தியாவில் தேடப்பட்ட போதிலும் இங்கேயே தங்கி விட்டார்” என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஜாகிர் தானாக முன்வந்து மலேசியாவை விட்டு வெளியேற வேண்டும் என்ற எழுத்தாளர் அனஸ் ஜூபேடியின் ஆலோசனையுடன் ஒத்துபோவதாக மட்டுமே லிம் குறிப்பிட்டுள்ளதாக ராம் கர்பால் கூறினார்.
“சட்ட காரணங்களுக்காக ஜாகீரை இந்தியாவுக்கு ஒப்படைக்க வேண்டும் என்று நானும் கூறியிருந்தேன். அனஸ் ஜூபேடியும் நானும் அகமட் பாட்லியின் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய நபர்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளோமா?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இஸ்லாத்தை மற்ற மதங்களுடன் ஒப்பிடும் ஜாகீரின் வழக்கமான முறை சில சமயங்களில் முஸ்லிமல்லாதவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஜூலை 31-ஆம் தேதி, ஜாகிர் நாயக்கை மலேசியாவில் வைத்திருப்பது இக்கட்டான சூழ்நிலையை இந்நாட்டிற்கு ஏற்படுத்தி விட்டதாக பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்திருந்தார்.