கோலாலம்பூர்: புக்கிட் டாமான்சாராவில் ஒரு வீட்டின் முற்றத்தில் நேற்று வியாழக்கிழமை வெடிப்பொருள் ஒன்றை காவல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
கோலாலம்பூர் காவல் துறைத் தலைவர் டத்தோஶ்ரீ மஸ்லான் லாசிம் கூறுகையில், மாலை 5 மணியளவில் பொதுமக்கள் அப்பொருளை கண்டுபிடித்து, இரவு 10 மணிக்கு காவல் துறையினரிடம் தெரிவித்ததாகக் கூறினார். வெடிகுண்டு புலனாய்வு பிரிவு (யுபிபி) மேற்கொண்ட சோதனையில் அது மேம்பட்டுத்தப்பட்ட வெடிப் பொருள் (ஐஇடி) என்று கண்டறிந்ததாக அவர் தெரிவித்தார்.
இன்று வெள்ளிக்கிழமை பெர்னாமா தொடர்பு கொண்டபோது, “காவல் துறையினர் இன்னும் அவ்வெடிப் பொருள் குறித்து விசாரித்து வருகின்றனர்” என்று அவர் கூறினார்.
இதற்கிடையில், நேற்று இரவு கேஎல் சென்ட்ரல் மற்றும் தலைநகரில் உள்ள ரஷ்ய தூதரகம் ஆகியவற்றில் வெடிகுண்டு என விடுக்கப்பட்ட மிரட்டல் பொய்யானது என்று காவல் துறையினர் அறிவித்துள்ளனர்.
மலேசியன் ரிசோர்சஸ் கார்பரேஷன் பெர்ஹாட் (எம்ஆர்சிபி) வழிநடத்தும் கேஎல் சென்ட்ரலில் இம்மாதிரியான மிரட்டல் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் பிரிக்பீல்ட்ஸ் மாவட்ட காவல் தலைமையக கட்டுப்பாட்டு மையத்திற்கு இரவு மணி 9-க்கு தெரிவித்ததாகவும், அதனை அடுத்து, யுபிபி மற்றும் கே 9 பிரிவு (துப்பறியும் நாய் பிரிவு) ஆகியவற்றை ஆய்வுக்காக நிறுத்தியதாகவும் மஸ்லான் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், கேஎல் சென்ட்ரலில் இரயில் மற்றும் வணிக நடவடிக்கைகளில் சந்தேகத்திற்கிடமான பொருள்கள் எதுவும் கிடைக்கவில்லை என்று அவர் கூறினார்.
“ஜலான் அம்பாங்கில் உள்ள ரஷ்ய தூதரகத்தில், விசாரணைகள் செய்யப்பட்டு அங்கும் எதிர்மறையான முடிவுகளே பெறப்பட்டன. வழங்கப்பட்ட தகவல்களும் தவறான தகவல்கள் என்று நம்பப்படுகிறது,” என்று அவர் தெரிவித்தார்.
இது குறித்து தகவல் உள்ள பொதுமக்கள் கோலாலம்பூர் காவல் நிலைய கட்டுப்பாட்டு மையத்தை 03 21159999 என்ற எண்ணிலும் அல்லது பிரிக்பீல்ட்ஸ் ஐபிடி கட்டுப்பாட்டு மையத்தை 03 22979268 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.