கொழும்பு: இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் விளையாட்டாளர் முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆயினும், இப்படத்தில் விஜய்சேதுபதி நடிக்கக்கூடாது என பலர் தங்களின் எதிர்ப்பினை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில், ஈழக் கவிஞர் தீபச்செல்வன், நடிகர் விஜய் சேதுபதியை இப்படத்திலிருந்து விலகிக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
விஜய் சேதுபதி இப்படத்தில் நடிக்க இருப்பது ஈழத் தமிழ் மக்களுக்கு பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளதாகவும், ஈழத் தமிழ் மக்களின் போராட்டத்திற்கு எதிராகவும், ஈழத் தாய்மார்களின் கண்ணீரை கொச்சைப்படுத்தி முரளிதரன் பேசிய கருத்துக்கள் யாவும் இன்னும் தங்கள் மனதிலிருந்து மறையவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“முத்தையா முரளிதரன் பிறப்பால், தமிழர். ஆனால் அவர் தமிழர் என்பதற்காக ஈழத் தமிழர்கள் ஒருபோதும் பெருமை கொண்டது கிடையாது. முரளிதரன் போல சிங்களத் தலைநகர் கொழும்பில் மொழியாலும் உணர்வாலும் தம்மை சிங்களவராக்கிக் கொண்ட பல தமிழர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எப்போதும் சிங்கள அரசுக்கு ஆதரவாக செயல்படுவதுடன் ஈழத் தமிழ் மக்கள் மீதான இன ஒடுக்குமுறையையையும் சிங்களத் தரப்பில் நின்று நியாயப்படுத்துவார்கள்.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
2009-ஆம் ஆண்டு இனப்படுகொலைப் போருக்குப் பிறகு, இலங்கையில் சமத்துவமும் சமாதானமும் நிலவுகின்றது என்றும், 20 வருடமாக இலங்கை அணியில் இருந்த தமக்கு ஒரு பிரச்சனையும் இல்லை என்றும் போரை வெற்றிகரமாக முடித்த மகிந்த ராஜபக்சேவுக்கு நன்றி என்றும் முரளி கூறியுள்ளதாகவும் தீபச்செல்வன் கூறியுள்ளார்.
விஜய் சேதுபதி நடிக்க இருக்கும் இப்படத்திற்கு 800 என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் பணிகள் தொடர்ந்துக் கொண்டுதான் இருக்கிறது. படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகளை தேர்வு செய்யும் பணிகள் நடந்து வருகிறது. இவ்வாண்டு டிசம்பர் மாதம் தொடங்கவுள்ள இதன் படப்பிடிப்பு இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் நடைபெற உள்ளது. 2020-ஆம் ஆண்டு இறுதிக்குள் இப்படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.