Home One Line P2 மறைந்த ஜனநாதனின் “இலாபம்” ஏப்ரலில் வெளியாகும்

மறைந்த ஜனநாதனின் “இலாபம்” ஏப்ரலில் வெளியாகும்

729
0
SHARE
Ad

சென்னை : அண்மையில் காலமான இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் “இலாபம்” திரைப்படம் ஏப்ரலில் வெளியாகும் என்பதை படக் குழுவினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்தப் படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்துள்ளார். பல வித்தியாசமான படங்களை வழங்கிய ஜனநாதன் இந்தப் படத்தையும் இயக்கியிருந்தார். எனினும் இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் பணிகளில் ஈடுபட்டிருந்தபோது அவர் திடீரென அகால மரணமடைந்தார்.

இதைத் தொடர்ந்து அவரின் “இலாபம்” என்னவாகும் என்ற ஐயப்பாடுகள் திரையுலகில் எழுந்தன. எனினும் அந்தப் படம் குறித்து தெரிவித்த படத் தயாரிப்புக் குழுவினரும் உதவியாளர்களும், தொழில்நுட்ப ரீதியாக படத்தை ஜனநாதன் ஏறத்தாழ முடித்து விட்டார் என்றும் எஞ்சிய சில பகுதிகளைத் தாங்கள் நிறைவு செய்து வருவதாகவும் கூறியுள்ளனர்.

#TamilSchoolmychoice

இதைத் தொடர்ந்து விஜய் சேதுபதியும் இந்தப் படம் வெளிவர வேண்டும் என்பதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.

ஜனநாதனின் இறுதிச் சடங்குகளிலும் விஜய் சேதுபதி கலந்து கொண்டதோடு, ஜனநாதனின் மருத்துவ செலவுகளையும் தானே ஏற்றுக் கொண்டார்.

கடந்த வியாழன் (மார்ச் 11) அன்று மதியம் “இலாபம்” படத் தொகுப்பு பணிகளின் இடையே  ஜனநாதன் வீட்டிற்குச் சாப்பிடச் சென்றுள்ளார். நீண்ட நேரமாக அவர் திரும்பாத காரணத்தால் அவருடைய உதவியாளர்கள் வீட்டிற்குச் சென்று பார்த்தபோது அவர் வீட்டில் சுயநினைவின்றி இருந்துள்ளார்.

உடனடியாக அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மருத்துவர்கள் அவரை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துப் பரிசோதனை செய்தார்கள். அவரது மூளையில் இரத்தக் கசிவு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அதற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

எனினும் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை மார்ச் 14-ஆம் தேதி அன்று காலையில் அவர் காலமானார்.