Home One Line P2 இயக்குனர் ஜனநாதன் காலமானார் – வைரமுத்து இரங்கல் கவிதை

இயக்குனர் ஜனநாதன் காலமானார் – வைரமுத்து இரங்கல் கவிதை

1090
0
SHARE
Ad

சென்னை: இயற்கை, ஈ, பேராண்மை ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் எஸ்.பி. ஜனநாதன் உடல் நலக் குறைவால் இன்று ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 14) காலமானார்.

கடந்த வியாழக்கிழமை (மார்ச் 11) மயங்கிய நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல் நிலை கவலைக்கிடமாக இருந்த நிலையில் இன்று அவர் காலமானார்.

அவருக்கு வயது 61.

#TamilSchoolmychoice

தற்போது விஜய் சேதுபதி நடித்து வரும் ‘லாபம்’ படத்தை இயக்கியிருந்தார். அதன் இறுதிக்கட்டப் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டிருந்தார் ஜனநாதன்.

கடந்த வியாழன் (மார்ச் 11) அன்று மதியம் படத் தொகுப்பு பணிகளின் இடையே  வீட்டிற்குச் சாப்பிடச் சென்றுள்ளார். நீண்ட நேரமாக அவர் திரும்பாத காரணத்தால் அவருடைய உதவியாளர்கள் வீட்டிற்குச் சென்று பார்த்தபோது அவர் வீட்டில் சுயநினைவின்றி இருந்துள்ளார்.

உடனடியாக அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மருத்துவர்கள் அவரை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துப் பரிசோதனை செய்தார்கள். அவரது மூளையில் இரத்தக் கசிவு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அதற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

எனினும் சிகிச்சை பலனின்றி இன்று ஞாயிற்றுக்கிழமை காலை அவர் காலமானார்.

தஞ்சாவூர் மாவட்டம் வடசேரியில் 1959-ம் ஆண்டு பிறந்தவர் எஸ்.பி.ஜனநாதன். கம்யூனிஸ்ட் கட்சி கொள்கைகளில் ஈடுபாடு கொண்டு அந்தக் கட்சியில் ஆரம்ப கட்டத்தில் தீவிரமாகப் பணியாற்றினார். அவரது மூத்த சகோதரர் ஒருவர் படத் தயாரிப்பாளராக இருந்தார். மூத்த சகோதரர் தயாரித்த படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றி திரையுலகில் நுழைந்தார்.

சில இயக்குநர்களிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தார். அவருடைய இயக்கத்தில் வெளியான முதல் படம் ‘இயற்கை’.

தொடர்ந்து ஜீவாவின் ஈ, ஜெயம் ரவியின் பேராண்மை, ஆர்யா, விஜய் சேதுபதியின் புறம்போக்கு என்கிற பொதுவுடமை ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார்.

விஜய் சேதுபதி, ஸ்ருதி ஹாசனை வைத்து லாபம் என்கிற படத்தை இயக்கி முடித்துள்ளார்.

வைரமுத்து இரங்கல் கவிதை

இதற்கிடையில் ஜனநாதன் படங்களில் பாடல்கள் எழுதியிருக்கும் கவிஞர் வைரமுத்து தனது இரங்கல் கவிதையை தனது டுவிட்டர் பக்கத்தில் பின்வருமாறு பதிவு செய்திருக்கிறார் :

இயக்குநர் ஜனநாதன் இறப்பு
ஒரு கெட்டியான துக்கம்.

அவருக்கு நானெழுதிய
‘காதல் வந்தால் சொல்லியனுப்பு’
மறக்கவியலாது.

செலுலாய்டு புத்தகத்தின்
ஓர் இலக்கியப் பக்கம்
கிழிந்துவிட்டது என்பேனா?

வானவில்லில் முற்போக்குச் சிவப்பு
அழிந்துபட்டது என்பேனா?

வருந்துகிறேன்;இரங்குகிறேன்.