கோலாலம்பூர்: இந்நேரத்தில் பிரதமரை தீர்மானிப்பதில் அதிக அக்கறைக் கொள்ள வேண்டாம் என்று பக்காத்தான் ஹாராப்பானுக்கு ஜசெக கட்சி ஆலோசகர் லிம் கிட் சியாங் நினைவூட்டியுள்ளார்.
அதற்கு பதிலாக பொதுத் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் தனது முயற்சிகளை மையமாகக் கொண்டு எப்படி செயல்படலாம் என்பதை பற்றி சிந்திக்கலாம் என்று லிம் கிட் சியாங் கூறினார்.
நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பது உட்பட முன்னதாக வாக்குறுதியளித்த உறுதிமொழிகளை நிறைவேற்ற அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகளில் மக்கள் அதிக அக்கறை கொண்டுள்ளனர்.
ஒரு சில பிகேஆர் கட்சித் தலைவர்கள் டாக்டர் மகாதீர் முகமட்டிடமிருந்து பிரதமர் பதவியினை அன்வார் இப்ராகிமிற்கு மாற்றுவதை உறுதிப்படுத்த முயன்றபோது யார் பிரதமராக வேண்டும் என்ற விவாதம் எழத் தொடங்கியது.
இதற்கிடையில், பக்காத்தான் ஹாராப்பானின் தேர்தல் வாக்குறுதி அறிக்கை தொடர்பில் விரிவான பரிசீலிணை செய்ய வேண்டி உள்ளதாக இஸ்காண்டார் புத்ரி நாடாளுமன்ற உறுப்பினருமான லிம் கூறினார்.
பக்காத்தான் அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட சீர்திருத்தம் மற்றும் மாற்றம் குறித்து பல மலேசியர்கள் விரக்தியை வெளிப்படுத்தியதால் இது செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.