கோலாலம்பூர்: பிரதமர் பதவி மாற்றம் குறித்த பிரச்சனையில் பக்காத்தான் ஹாராப்பான் தலைவர்கள் தனிப்பட்ட மற்றும் அரசியல் நலன்களை ஒதுக்கி வைத்து, நாட்டிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று பிகேஆர் கட்சியின் உதவித் தலைவர் சுரைடா காமாருடின் கூறியுள்ளார்.
அனைத்து தரப்பினரும் சுயநலமாக இருக்கக்கூடாது என்றும் அதே நேரத்தில் டாக்டர் மகாதீர் முகமட்டிடம் இருந்து அன்வார் இப்ராகிமிடம் பிரதமர் பதவி ஒப்படைப்பதற்கான பிரச்சனைக்கு தீர்வு காண ஒரு நெகிழ்வான அணுகுமுறையை பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
கடந்த ஆண்டு பொதுத் தேர்தலுக்கு முன்னர் பக்காத்தான் ஹாராப்பான் கூட்டணிக் கட்சிகளின் ஒப்பந்தத்தை பற்றி வினவியபோது, இது குறித்து இன்னும் விவாதிக்கப்படலாம் என்று சுரைடா கூறினார்.
“அனைத்து உறுப்பினர்களும் முதிர்ச்சியடைந்தவர்களாக இருந்தால், எது முக்கியமானது என்பதைப் பற்றி அவர்கள் சிந்திப்பார்கள். நாட்டின் முன்னேற்றமா அல்லது தனிநபரின் முன்னேற்றமா? அல்லது ஒரு கட்சியின் முன்னேற்றமா?” என்று அவர் குறிப்பிட்டார்.
“எனவே ஒட்டுமொத்தமாக நாட்டின் நலன்களை நாம் கவனிக்க வேண்டும். இன்றைய நிலையில் சுயநலமாக இருக்கக்கூடாது” என்று இன்று சனிக்கிழமை அவர் தெரிவித்தார்.