
சென்னை – ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த இந்தியன் 2 திரைப்படம் மீண்டும் தொடங்கவிருப்பதாக நடிகர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
தற்போது பிக்பாஸ்-3 நிகழ்ச்சியை ஸ்டார் விஜய் தொலைக்காட்சி அலைவரிசையில் நடத்தி வரும் கமல்ஹாசன், ஒவ்வொரு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஒரு வாரம் நடந்ததைத் தொகுத்து வழங்குவதும், பங்கேற்பாளர்களுடன் உரையாடுவதும், இரசிகர்கள் தேர்ந்தெடுத்த ஒருவரை பிக்பாஸ் இல்லத்திலிருந்து வெளியேற்றுவதும் வழக்கம்.
கடந்த வாரம் வரை முறுக்கு மீசையுடன் காட்சியளித்த கமல், நேற்று சனிக்கிழமை (ஆகஸ்ட் 3) ஒளியேறிய நிகழ்ச்சியில் தோன்றியபோது மீசையை மழித்தவராகக் காட்சியளித்தார்.
நிகழ்ச்சியின் தொடக்கித்திலேயே, ‘இந்தியன் 2 மற்றும் தலைவன் இருக்கின்றான் படங்களுக்கான வேலைகள் தொடங்கிவிட்டன என பலத்த கரவொலிகளுக்கிடையில் அறிவித்தார். அதன் காரணமாகவே தனது மீசையை மழிக்க வேண்டியதிருந்தது என்றும் கூறினார்.
சில கருத்து வேறுபாடுகளால் இந்தியன் 2 படம் கைவிடப்பட்டது என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அந்தப் படம் மீண்டும் தொடங்கப்படுகிறது என்ற அறிவிப்பு கமல் இரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதே வேளையில் ‘இம்சை அரசன் 24-ஆம் புலிகேசி’ படத்திலிருந்து விலகிக் கொள்வதற்கு ஈடாக, இரண்டு படங்களில் இலவசமாக நடித்துக் கொடுப்பதாக வடிவேலு ஒப்புக் கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை வைத்துப் பார்க்கும்போது இந்தியன் 2 படத்தில் வடிவேலு நடிக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.