Home One Line P1 “ருக்குன் நெகாரா கோட்பாடு, நம் திசைகாட்டி” – வேதமூர்த்தி கூறுகிறார்

“ருக்குன் நெகாரா கோட்பாடு, நம் திசைகாட்டி” – வேதமூர்த்தி கூறுகிறார்

1155
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மலேசியர்களின் அன்றாட வாழ்வில், அவர்கள் எந்த நிலையில் இருந்தாலும் இனம்-மொழி-சமயம் உள்ளிட்ட எல்லாக் கூறுகளையும் கடந்து தத்தம் வாழ்க்கைப் பயணத்தில் ருக்குன் நெகாரா கோட்பாடு ஏதேனும் ஒரு வகையில் பிரதிபலிக்க வேண்டும் என்று பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி தெரிவித்தார்.

சுதந்திர தினமான ஆகஸ்ட் 31 முதல் மலேசிய தினமான செப்டம்பர் 16 வரை உள்ள 17 நாட்களை உட்படுத்தி ‘கொஞ்சம் நல்லதை சொல்லுங்கள்-2019’ என்னும் பிரச்சார இயக்கத்தை தலைநகர், டெய்லர்ஸ் கல்லூரியில் கடந்த ஆகஸ்ட் 6-ஆம் தேதி தொடக்கி வைத்து உரையாற்றிய தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நலத் துறை அமைச்சருமான பொன்.வேதமூர்த்தி, நம் நாடு இதுவரை அடைந்துள்ள வளப்பத்திற்கும் முன்னேற்றத்திற்கும் அடிப்படையாக அமைவது ஒற்றுமை என்னும் கூறுதான் என்றார்.

“நாம், நம் வாழ்க்கைப் பயணத்தில் எதிர்கொள்ளும் ஒவ்வொருவரிடமும் புன்னகையை சிந்தலாம்; நலம் விசாரிக்கலாம்; நாட்டைப் பற்றி, மக்களைப் பற்றி, மூத்த தலைவர்களைப் பற்றி கருத்து பரிமாறலாம்; ‘கொஞ்சம் நல்லதை சொல்லுங்கள்-2019’ பதாகையில் ஒரு ஒரு நல்ல செய்தியை எழுதலாம்; இவை யாவும் எளிமையான விசயங்களாக இருக்கலாம்; ஆனால், இதன் விளைவு பெரிதாக அமையும்” என்றும் வேதமூர்த்தி கூறினார்.

#TamilSchoolmychoice

மலேசிய மக்களிடம் சுதந்திர உணர்வையும் சரித்திர சிந்தனையையும் புதுப்பிக்கின்ற மாதமாக இப்போது மலர்ந்துள்ள இந்த ஆகஸ்ட் மாதம் விளங்குகிறது. மக்களிடம் ஒருமைப்பாட்டு உணர்வையும் இணக்கமான போக்கையும் இன்னும் அதிகமாக உண்டாக்கும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகளைப் படைத்து வரும் ஜுபேடி நிறுவனம், இந்த ஆண்டும் ‘கொஞ்சம் நல்லதை சொல்லுங்கள்-2019’ என்னும் பிரச்சார இயக்கத்தை மெர்டேக்கா தினத்தில் தொடங்க இருப்பது மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது என்று ஏராளமான கல்லூரி மானவர்கள் திரண்டிருந்த இந்த விழாவில் செனட்டருமான அமைச்சர் பொன்.வேதமூர்த்தி மேலும் குறிப்பிட்டார்.