Home One Line P1 வேலூர்: 8,141 வாக்குகளில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி!

வேலூர்: 8,141 வாக்குகளில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி!

1262
0
SHARE
Ad

சென்னை: இன்று வெள்ளிக்கிழமை காலை வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகமே முன்னணியில் இருந்தார். அதிமுக வட்டாரங்களில் கொண்டாட்டங்களும், வெற்றிச் சிரிப்புகளும் அதிகமாகக் காணப்பட்டன.

ஆனால், நேரம் செல்லச் செல்ல திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னணிக்கு வந்து அதிரடியாக ஒரு கட்டத்தில் 7 ஆயிரம் வாக்குகள் முன்னணி வகித்தார். தொடர்ந்து பெரும்பான்மையைத் தக்க வைத்துக் கொண்ட கதிர் ஆனந்த், இறுதி முடிவாக 8,141 வாக்குகள் பெரும்பான்மையில் அதிகாரபூர்வமாக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அவருக்கு 4,85,340 வாக்குகள் கிடைத்த நிலையில், அதிமுக வேட்பாளர் சண்முகம் 4,77,199 வாக்குகள் பெற்றார். நாம் தமிழர் கட்சியின் தீபலெட்சுமி 26,995 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்திருப்பதும் தமிழக அரசியலில் புதிய திருப்புமுனையாக அமைந்திருக்கிறது.

#TamilSchoolmychoice

திமுக வெற்றியைத் தொடர்ந்து, அக்கட்சி தொண்டர்கள் சென்னை அறிவாலயத்தில் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்

அதிமுக தோல்வியடைந்தாலும், அந்தக் கட்சியின் வாக்கு எண்ணிக்கை அவர்களுக்கு ஒரு வெற்றியாகவே பார்க்கப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற பொதுத் தேர்தலில் இலட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் 37 தொகுதிகளில் தோல்வியடைந்த அதிமுக, வேலூர் தொகுதியில் இவ்வளவு குறுகிய பெரும்பான்மையில் வெற்றியை நெருங்கி வந்திருப்பது அதன் ஆதரவுக் களம் சிதையாமல் இருப்பதையும், பாஜக கட்சியுடனான அவர்களின் கூட்டணி இன்னும் வலிமையுடன் இருப்பதையுமே எடுத்துக் காட்டியுள்ளது.

வேலூர் மக்களவைத் தொகுதிக்கு கடந்த ஆகஸ்டு 5-ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில், அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏசி சண்முகம், திமுக  வேட்பாளர் கதிர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலட்சுமி உள்பட 28 பேர் போட்டியிட்டனர்.

இதில் மொத்தம் 71.5 விழுக்காடு வாக்குகள் பதிவாகின.