புத்ராஜெயா: பி-40 இந்திய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் கல்வி, குடும்ப வறுமையால் தடைபடக் கூடாதென்பதற்காக மித்ரா கல்வி உதவி நிதி அளிக்கிறது என்று பிரதமர் துறை அமைச்சர் பொன்வேதமூர்த்தி அறிவித்துள்ளார்.
2019-2020 கல்வித் தவணைக்காக பொதுப்பல்கலைக்கழகம், பொலி-டெக்னிக் மற்றும் தொழிற்பயிற்சி நிறுவனங்களில் சேரும் பி-40 இந்திய கூடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு இந்தக் கல்வி உதவி நிதி வழங்கப்படுகிறது.
வறுமை நிலையில் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் கல்விக்காக எதிர்நோக்கும் நிதிச் சுமையை குறைப்பதற்காகவும் பெற்றோரின் பொருளாதார நெருக்கடியால் பிள்ளைகளின் கல்வி பாதிக்கப்படக் கூடாதென்பதற்காகவும் குறிப்பாக இளைஞர்கள் தங்களின் சமூக-பொருளாதார நிலையை மேம்படுத்திக் கொள்ளவும் இந்த நிதியுதவி அளிக்கப்படுவதாக மலேசிய முன்னேற்றக் கட்சியின் (எம்.ஏ.பி.) தலைவருமான பொன்.வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இந்த நிதி உதவியைப் பெறுவதற்கு தகுதியான மாணவர்களை மித்ரா கல்விப் பிரிவு அதிகாரிகள் தேர்ந்து எடுப்பார்கள். குடும்ப வருமானம், அடிப்படைத் தேவை, குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை ஆகிய தரவுகளின் அடிப்படையில் மித்ரா அதிகாரிகள் உரிய நடவடிக்கையை மேற்கொள்வார்கள்.
பொருத்தமான நேரத்தில் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை, ஏழ்மைக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் உயர் கல்வி பெறவும் அவர்கள் தங்களின் எதிர்காலத்தை உறுதிசெய்யவும் வழிவகை காணப்படும் என்று நம்பிக்கைக் கூட்டணி அளித்த வாக்குறுதிக்கு ஏற்ப மேற்கொள்ளப்படுகிறது என்று தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான செனட்டர் பொன்.வேதமூர்த்தி இதன் தொடர்பில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.